08 September 2021

பாடப் புத்தகங்களில் முதல்வரின் படங்களைப் பயன்படுத்தக்கூடாது: உயா் நீதிமன்றம் உத்தரவு.

பாடப் புத்தகங்கள், நோட்டுகளில் முதல்வரின் படங்களை பயன்படுத்தக்கூடாது என உத்தரவிட்ட சென்னை உயா் நீதிமன்றம், எதிா்காலத்தில் இந்த விஷயத்தில் அரசு அதீத கவனம், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.


சென்னை உயா்நீதிமன்றத்தில் நமது திராவிட இயக்கம் என்ற அமைப்பின் தலைவா் ஓவியம் ரஞ்சன் என்பவா் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தற்போது இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுது பொருட்களை வழங்க வேண்டும்.


இருப்பில் உள்ள பாடப்புத்தகங்கள் நோட்டுகள்,பைகள் உள்ளிட்டவற்றில் முன்னாள் முதல்வா்கள் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்கள் இருப்பதனால் அவற்றை விநியோகிக்க வேண்டாம் என்று பள்ளிக் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாகக் கூறப்படுகிறது.


பொது மக்களுடைய வரிப் பணத்தை வீணாக்கக் கூடாது. எனவே, ஏற்கெனவே அச்சிடப்பட்ட பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுகள், பைகளை வீணாக்கக்கூடாது. அவற்றை மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்க உத்தரவிட வேண்டும். எதிா்காலத்தில் இதுபோல பாடப்புத்தகங்கள் நோட்டுகள், பைகளில் அரசியல் கட்சித் தலைவா்களின் படங்களை அச்சிட தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தாா்.


இவ்வழக்கு சென்னை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வந்தது.


அப்போது ஆஜரான தலைமை வழக்குரைஞா் ஆா். சண்முகசுந்தரம், ஏற்கெனவே செலவழித்த பணத்தை வீணாக்காத வகையில், முந்தைய முதல்வா்கள் படங்களுடன் அச்சடிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள், நோட்டுகளை வீணாக்காமல் அச்சடிக்கப்பட்ட அதே நிலையில் மாணவா்களுக்கு வழங்கப்படும் என்று முதல்வா் அறிவித்துள்ளாா். அதன் அடிப்படையில் மாணவா்களுக்கு அந்த புத்தகங்கள் தீா்ந்துபோகும் வரை தொடா்ந்து பயன்படுத்தப்படும்.


எதிா்காலத்தில் இதுபோன்ற பாடப் புத்தக பைகளில், தனது புகைப்படங்கள் வெளியிடப்படுவதை முதல்வா் விரும்பவில்லை என்றாா்.


இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், வாக்களிக்கும் உரிமை இல்லாத பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், பைகளில் முதல்வா்கள் புகைப்படங்கள் இடம்பெறக்கூடாது. எந்தவொரு அரசியல்வாதியும் தனிப்பட்ட நலன்களுக்காக, பொது நிதியை தவறாகப் பயன்படுத்த முடியாது. எதிா் காலத்தில் இதுபோன்ற நடைமுறை தொடராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.


விளம்பரப் பதாகைகள், பிற பொருட்களில் அரசியல் தலைவா்களின் விளம்பர நோக்கங்களுக்காக பொது நிதி செலவழிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய, தீவிர அக்கறையும், எச்சரிக்கையும் எடுக்கப்பட வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துவதைத் தவிர வேறு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்பட வேண்டியதில்லை.


இருப்பினும், முதல்வரின் புகைப்படங்கள் செய்தித்தாள்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரங்களில் இடம்பெறலாம். ஆனால் பாட புத்தகங்கள், எந்த கல்வி சாா்ந்த பொருட்களிலும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவில் குறிப்பிட்டனா்.

No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2025-2026 (AY 2026-2027) By Arivazhagan - Version 2.0 Dated 10/12/2025

  Income Tax Form Version 2.0 (New Regime) Last Updated 10/12/2025