தமிழ்நாட்டில் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறப்பிற்கு பின் கொரோனா பரவல் அதிகரிக்காவிட்டாலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு தொடர்ந்து தொற்று பதிவாகி வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கொரோனா பரவுகிறது என்று சொல்வது தவறான கருத்து. ஏற்கெனவே அறிகுறிகள் இருந்தவர்களுக்கு பள்ளிகளில் நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எந்தெந்த பள்ளிகளில் கொரோனா பாதிப்பு பதிவாகிறதோ அங்கு உடனடியாக விடுமுறை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 23 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனோ தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. மாணவர்கள் சுழற்சி முறையில் பள்ளிக்கு வர அனுமதிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 6 நாட்கள் மட்டுமே பள்ளிகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களை மட்டுமே உட்கார வைக்க வேண்டும், மாணவர்கள் மத்தியில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும் ஆகிய பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரவி வரும் நிலையில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் 15 நாட்களுக்கு ஒருமுறை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் RT-PCR பரிசோதனை நடத்த தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தொற்று பாதிப்புள்ளவர்கள் உடனடியாக கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்படுவர், இதனால் பரவல் வேகம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.