பத்துப்பாட்டு :
சங்க கால இலக்கியங்களில் முக்கியமானவை எட்டுத்தொகை, பத்துப்பாட்டு. இவை இரண்டும் சேர்ந்ததே பதினெண் மேல்கணக்கு நூல்கள். தொகை என்பதற்கு பல புலவர்கள் பாடியது என்றும் பாட்டு என்பதற்கு தனி ஒரு புலவர் பாடியது என்றும் பொருள்.
பத்துப்பாட்டு நூல்கள் கடைச்சங்க காலத்தில் தோன்றியவை. பத்துப்பாட்டு என்பது பத்து தனித்தனி பாடல்களின் தொகுப்பாகும். ஒவ்வொரு பாடலும் நூறு அல்லது அதற்கு மேலான அடிகளைக் கொண்ட ஒரு நூலாக விளங்குகிறது.
"முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சி பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து". ,
- என்ற வெண்பா மூலம் பத்துப்பாட்டில் உள்ள நூல்களின் பெயர்களை அறியலாம்.
அதாவது திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, முல்லைப் பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப் பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய நூல்களைக் கொண்டதே பத்துப்பாட்டு நூல்கள் ஆகும். பத்துப்பாட்டில் உள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பல்வேறு புலவர்களால் பாடப்பட்டவை ஆகும். ஆற்றுப்படை நூல்களில் வரும் ஆற்றுப்படுத்துதல் என்பதன் பொருள் வழிப்படுத்துதல்.
1. திருமுருகாற்றுப்படை :
திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் முருகன். இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. முருகனிடம் வீடுபேறு அடைந்த ஒரு புலவர், வீடுபேறு அடைய விரும்பும் புலவரை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு புலவர் ஆற்றுப்படை என்ற மற்றொருப் பெயரும் உண்டு. முருகப் பெருமானின் திருவுருவம், அவரது ஆறுபடை வீடுகள், அங்கு நடைபெறும் வழிபாட்டு முறைகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
2. பொருநராற்றுப்படை :
பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக் கண்ணியார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 248 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. கரிகாலனிடம் பரிசில் பெற்ற ஒரு பொருநன், பரிசில் பெற விரும்பும் பொருநனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பொருநன் என்பவன் யாழ் இசைத்துக் கொண்டு, பாடல் பாடிக் கொண்டு, தாளத்துக்கு ஏற்ப நடித்துக் கொண்டு வந்து அரசனிடம் பரிசில் பெரும் கலைஞர்கள் ஆவார். கரிகாலனின் பெருமை, வீரச் செயல்கள், கொடைத்தன்மை, போர்த்திறம், வெண்ணிப் போரில் பெற்ற வெற்றி, அரசியல் மேன்மை, விருந்தோம்பல் குணம், சோழ நாட்டின் வளங்கள், பாலை யாழின் சிறப்பு, பொருநனின் வறுமை நிலை, பொருநன் மனைவி பாடினி, பண்டமாற்று முறை, நெசவுத் தொழில் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
3. சிறுபாணாற்றுப்படை :
சிறுபாணாற்றுப்படை இயற்றியவர் நல்லூர் நத்தத்தனார். பாட்டுடையத் தலைவன் நல்லியக் கோடன். இந்நூல் 269 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. சிறிய யாழை வாசிப்போர் சிறு பாணர் என்று அழைக்கப்பட்டனர். நல்லியக் கோடனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். சிறிய யாழின் சிறப்பு, சிறு பாணனின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, நல்லியக் கோடனின் பெருமை, கொடைப் பண்பு, விருந்தோம்பல் குணம், அவனது ஒய்மான் நாட்டின் வளங்கள், கடையேழு வள்ளல்களின் வரலாறு, மூவேந்தர்களின் நாடுகள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
4. பெரும்பாணாற்றுப்படை :
பெரும்பாணாற்றுப்படை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் தொண்டைமான் இளந்திரையன். இந்நூல் 500 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பெரிய யாழை வாசிப்போர் பெரும் பாணர் என்று அழைக்கப்பட்டனர். இளந்திரையனிடம் பரிசில் பெற்ற ஒரு பாணன், பரிசில் பெற விரும்பும் பாணனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். பெரிய யாழின் சிறப்பு, பெரும் பாணரின் வறுமை நிலை, பாணன் மனைவி பாணினி, இளந்திரையனின் கொடைப் பண்பு, தொண்டை நாட்டின் வளங்கள், பல தொழில் புரியும் மக்கள், வேடர், ஆயர், உழவர், பரதவர், எயினர், மறவர், அந்தணர் ஆகிய குடிகளையும் அவர்களின் விருந்தோம்பல் பண்பு, தொண்டை நாட்டின் தலைநகரான காஞ்சி மாநகரின் சிறப்பு, கடற்கரையில் இருந்த வானுயர்ந்த கலங்கரை விளக்கம், உப்பு வணிகம் செய்த உமணர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
5. முல்லைப் பாட்டு :
முல்லைப் பாட்டு ஆசிரியர் நப்பூதனார். பாட்டுடைய தலைவன் பெயர் தெரியவில்லை. இந்நூல் 103 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. தலைவியைப் பிரிந்து தலைவன் போர்க்களம் செல்வது, தலைவனின் பிரிவை தாங்க முடியாமல் தலைவி வருந்துவது, தலைவன் வெற்றியோடு திரும்பி வருவான் என முதிய பெண் ஆறுதல் கூறுவது, தமிழர்களின் போர்க்களம், போர்க் கருவிகள், யவனர்கள் காவல் புரிவது, முல்லை நில கடவுள், பாவை விளக்கு, மழைக் காலத்தில் பூக்கும் மலர்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
6. மதுரைக் காஞ்சி :
மதுரைக் காஞ்சி ஆசிரியர் மாங்குடி மருதனார். பாட்டுடைய தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 782 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. உலகில் எதுவும் நிலையில்லை என்ற உண்மையை தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு எடுத்துக் கூறுவது, நெடுஞ்செழியனின் வீரம், நேர்மையான ஆட்சி, முன்னோர்களின் சிறப்பு, பாண்டிய நாட்டின் இயற்கை வளம், ஐவகைத் திணைகள், மதுரையில் இயங்கிய வந்த பாண்டியர்கள் நீதிமன்றம், நாலங்காடி மற்றும் அல்லங்காடி, ஏழைகளுக்கு உணவளிக்கும் அன்ன சாலைகள், மதுரையின் தோற்றம், வீதிகள் மற்றும் வீடுகளின் அமைப்பு, மதுரையைச் சுற்றி இருந்த மதில்கள், அகழிகள், சமண - பௌத்த பள்ளிகள், அந்தணர் பள்ளிகள், சமய சகிப்புத்தன்மை, பலவகை தொழில்கள், கடல்கடந்த வாணிகம், பூவேலை செய்யப்பட்ட ஆடைகள், ரத்தினக் கற்கள் பதித்த ஆபரணங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
7. நெடுநல்வாடை :
திருமுருகாற்றுப்படை இயற்றியவர் நக்கீரர். பாட்டுடையத் தலைவன் நெடுஞ்செழியன். இந்நூல் 188 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நெடுநல்வாடை என்பதற்கு நீண்ட நல்ல வாடைக் காற்று என்று பொருள். வடக்கு இருந்து வீசுவது வடை காற்று தெற்கில் இருந்து வீசுவது தென்றல் காற்று. வாடை என்பது குளிர்க் காற்றை குறிக்கிறது. அரசன் போர்களம் செல்கிறான். அரசனைப் பிரிந்து வாடும் அரசிக்கு வாடைக் காற்று நெடியதாக தோன்றுகிறது. அதனைக் கண்ட அரண்மனை பெண் அரசன் விரைவில் திரும்ப வேண்டும் என்று கொற்றவை வழிபாடு செய்கிறாள். அரசன் போர்களத்தில் புண்பட்ட வீரர்களுக்கும், யானைகளுக்கும், குதிரைகளுக்கும் அன்பு காட்டி ஆறுதல் செலுத்துகிறார். வீரன் ஒருவனுடன் அரசன் போர்க் களத்தைச் சுற்றிப் பார்ப்பது, பெரிய அரண்மனை, உயரமான மதில் சுவர்கள், கோட்டை வாயில்கள், அரசனது அந்தப்புரம், சதுர வடிவில் கட்டப்பட்ட வீடுகள், ஆடை அணிகலன்கள், சடங்குகள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.
8. குறிஞ்சிப் பாட்டு :
குறிஞ்சிப் பாட்டு ஆசிரியர் கபிலர். பாட்டுடைய தலைவன் ஆரிய அரசன் பிரகதத்தன். இந்நூல் 261 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. ஆரிய அரசன் பிரகதத்தனுக்கு தமிழர்களின் அறத்தை கூறுவறு, கற்பு மணம், களவு மணம், தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பு, தலைவன் யானையை விரட்டிய வீரம், தலைவனைப் பிரிந்த தலைவி துயரப்படும் காட்சி, நவரத்தின ஆபரணங்கள், 99 வகையான மலர்கள், குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்களின் வாழ்க்கை முறை, மலை வளம், மறுபிறப்பில் நம்பிக்கை, முருகன் வழிபாடு ஆகியவை பற்றிக் கூறுகிறது.
9. பட்டினப்பாலை :
பட்டினப்பாலை ஆசிரியர் கடியலூர் உருத்திரங் கண்ணனார். பாட்டுடைய தலைவன் கரிகாலச் சோழன். இந்நூல் 301 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. பொருள் தேட வேண்டி தலைவன் தலைவியை பிரிந்து செல்ல நினைக்கிறான். தான் பிரிந்து செல்வதை தலைவி தாங்கமாட்டால் எனக் கருதும் தலைவன் தனது முடிவைக் கைவிடுவதைப் பற்றி கூறுகிறது. பட்டினம் என்பது துறைமுக நகரத்தைக் குறிக்கிறது. கரிகாலனின் சிறப்பு, வீரச் செயல்கள், கொடைப் பண்பு, அவனது தலைநகரமான காவிரிப் பூம்பட்டினத்தின் சிறப்பு, அங்கு நிறுத்தப்பட்டு இருந்த கப்பல்கள், கடல் கடந்த வாணிகம், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, சுங்க வரி வசூல், ஆகியவை பற்றிக் கூறுகிறது.
10. மலைபடுகடாம் :
மலைபடுகடாம் ஆசிரியர் பெருங்கௌசிகனார். பாட்டுடைய தலைவன் நன்னன் சேய் நன்னன். இந்நூல் 583 அடிகளைக் கொண்ட ஒரே பாடலாக உள்ளது. நன்னனிடம் பரிசில் பெற்ற ஒரு கூத்தன், பரிசில் பெற விரும்பும் கூத்தனை ஆற்றுப்படுத்தி அனுப்புகிறார். எனவே இதற்கு கூத்தர் ஆற்றுப்படை என்று மற்றொருப் பெயரும் உண்டு. நன்னன் ஒரு சிறந்த போர் வீரன், கொடை வள்ளல், விருந்தோம்பல் குணம் மிகுந்தவன். தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பல் குன்றக் கோட்டம் என்பது இவனுடைய நாடு. அதன் தலைநகர் செங்கன்மா என்கிற செங்கம். நாகத்தை வழிபடுதல், நடுகற்கள் வழிபாடு, நன்னன் நாட்டு மக்களின் வாழ்க்கை முறை, உணவுப் பொருட்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை பற்றிக் கூறுகிறது.