2022-23ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் கடந்த 2019ம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகின்றார். அவர் தாக்கல் செய்யும் 4வது பட்ஜெட் இது. கடந்த ஆண்டை போல இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மக்களவையில் ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்த பின், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது,கொரோனா காலத்திலும் நாட்டின் பொருளாதாரம் முன்னேறி வருகிறது.தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தியதால் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது.
* ஏழைகள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்காக ஒன்றிய அரசு செயலாற்றி வருகிறது.உலகில் உள்ள பெரிய நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம்தான் அதிக வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது.
*நடப்பாண்டில் பொருளாதார வளர்ச்சி 9.2% ஆகா இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வகுப்பினரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் நிதித்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
*சிறு, குறு, நடுத்தர தொழிற்துறையினரை மேம்படுத்தும் வகையில் புதிய வரி விதிப்புகள் இருக்காது. அடுத்த 25 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
*ஏழைகளுக்கு அனைத்து வாய்ப்புகளையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
*புதிய இந்தியாவை கட்டமைப்பதற்கான பட்ஜெட்டாக நடப்பாண்டின் பட்ஜெட் இருக்கும். ஒருங்கிணைந்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
*எல்ஐசி நிறுவனத்தின் பொது பங்குகள் விரைவில் வெளியிடப்படும்.உற்பத்திக்கான ஊக்கத்தொகைத் திட்டம் நல்ல பலனை அளித்து வருகிறது.
*ஏழை மக்களுக்கு எரிவாயு வசதி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
*One station, One product திட்டம் உள்ளூர் வணிகத்திற்கு உதவியாக இருக்கும், பொருட்கள் விநியோக பாதையை மேம்படுத்தும்
*நாட்டின் தேசிய நெடுஞ்சாலை வரும் நிதியாண்டில் 25,000 கி.மீ. தொலைவுக்கு புதிதாக அமைக்கப்படவுள்ளது. போக்குவரத்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
*400 புதிய வந்தே பாரத் ரயில்கள் அடுத்த 3 ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும்; 100 சரக்கு முனையங்கள் அமைக்கப்படும்
*ரயில் நிலையங்களையும் நகர்ப்புற மெட்ரோக்களையும் இணைக்க பெரிய அளவில் திட்டம் வகுக்கப்படும்.
*நாடு முழுவதும் ரசாயன உரங்களின் பங்களிப்பு இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை
*உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 1.63 கோடி விவசாயிகளிடம் இருந்து தானியங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
*இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்படும் பொருட்களை மதிப்புக்கூட்டி விற்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
*வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது
*கிருஷ்ணா நதி - பெண்ணாறு - காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி-கிருஷ்ணா நதிநீர் இணைப்புத் திட்டம் இறுதி செய்யப்பட்டுள்ளது.
*விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை கொள்முதல் செய்யும் திறன் அதிகரிப்பு
*ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது.
*அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன
*வேளாண் ஏற்றுமதிக்கு ரயில்வே துறையை திறம்பட செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.