மாமன்னர் இராஜராஜ சோழன்.
சோழ மன்னன் சுந்தர சோழனுக்கும் திருக்கோவலூர் மலையான் குலத்தை சேர்ந்த வானவன் மாதேவிக்கும் இரண்டாம் மகனாகப் பிறந்தவன் அருண்மொழி என்னும் ராஜராஜன்.
ஆதித்த கரிகாலன் என்னும் மூத்தோன் கொலையுண்டு இறந்தபிறகு நாட்டு மக்கள் அனைவரும் இளைஞர் அருண்மொழியே முடிசூட ஏற்றவன் என விரும்பினர். அப்போது தனது சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழருக்குத் தானே ஆள வேண்டும் என்ற விருப்பம் இருந்ததை அறிந்த அருண்மொழி அவர் விருப்பப்படியே அவரை அரியணையில் அமரச்செய்தான்.
அவர் இருந்தவரை ஆட்சியை மனத்தாலும் நினைக்காமல் இருந்தான். மதுராந்தக உத்தம சோழர் 15 ஆண்டுகள் ஆட்சி புரிந்தார். அப்போது அருண்மொழி இளவரசராக இருந்தான்.
கி.பி.985ல் மதுராந்தக உத்தமசோழர் மறைந்த பிறகு சோழப் பேரரசனாக அருண்மொழி மணிமுடி சூடினான். முடிசூட்டு விழாவின் போது "ராஜராஜ சோழன்" என்ற சிறப்பு பெயரைச் சூடிக்கொண்டான்.
இளம் வயதிலேயே தாய், தந்தையரை இழந்த ராஜராஜன் தன் பெரிய பாட்டி செம்பியன் மாதேவியார், தமக்கை குந்தவை பிராட்டியார் ஆகியோர் அரவணைப்பில் பண்புடைய பெருமகனாக வளர்ந்தான்.
ராஜராஜனுக்குப் பல மனைவியர் இருந்தனர். இவர்களில் தந்திசக்தி விடங்கி என்னும் லோகமாதேவியே பட்டத்தரசியாக விளங்கியவர்.
மாமன்னனுக்கு வானவன் மாதேவியின் மூலம் பிறந்த ஒரே மகன் மதுராந்தகன் என்னும் ராஜேந்திர சோழனாவான். இவனுக்கு இரண்டு தங்கையர்கள் இருந்தனர். மூத்தவள் மாதேவி அடிகள், இளையவள் குந்தவை.
ராஜராஜன் தன் பாட்டி செம்பியன் மாதேவியார் நினைவாக ஒரு பெண்ணுக்கு மாதேவி அடிகள் என்றும், சகோதரி குந்தவைப் பிராட்டியார் நினைவாக மற்றொரு பெண்னுக்கு குந்தவை என்று பெயரிட்டதோடு சிறிய தந்தை மதுராந்தக உத்தம சோழர் நினைவாக மகனுக்கு மதுராந்தகன் என்றும் பெயரிட்டு மகிழ்ந்தான்.
மணிமுடி சூடிய ராஜராஜன் பல்லவர் ஆட்சியில் போர்களின் மிகுதியால் தமிழகத்தின் செல்வ வளங்கள் எல்லாம் சீரழிந்ததை உணர்ந்தான். ஒரு நாடு செழிக்க வேண்டுமெனில் அந்நாடு போர்க்களமே காணாமல் இருக்க வேண்டும் என்பதனை உணர்ந்து சோழநாட்டை சூழ்ந்த எல்லா நாடுகளுக்கும் தூதர்களை அனுப்பி நட்புக்கரம் நீட்டினான்.
எதிர்த்தவர்களை வென்று அவர்களால் மேலும் போர் தொடராதவாறு தன் படைகளையும், தானைத்தலைவர்களையும் அந்நாடுகளில் நிலையாய் இருக்குமாறு செய்தான். இதனால் சோழநாட்டிற்குள் போர் கிடையாது. செல்வ அழிவு கிடையாது.
மாறாக பெருஞ்செல்வம் குவிந்தது. மக்கள் வாழ்க்கை அமைதியாக இருந்தது. கவின் கலைகள் வளர்ந்தன. சைவத்தின்பால் ஏற்பட்ட பற்று காரணமாக "சிவபாதசேகரன்" எனப் பட்டம் சூடி மகிழ்ந்தான்.