Home

Showing posts with label Archeology. Show all posts
Showing posts with label Archeology. Show all posts

05 February 2024

திருப்பத்தூர் கந்திலி அருகே 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழங்கால பொருட்கள் கண்டெடுப்பு

திருப்பத்தூர் அடுத்த கந்திலி தொப்பலகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், விவசாயி. இவர் இன்று காலை தனது விவசாய நிலத்திற்கு ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பைப்லைன் அமைக்க பள்ளம் தோண்டினார். அப்போது சிறிய அளவிலான கொப்பரைகள் மற்றும் மண் சுவடுகள், மண் பாத்திரங்கள், கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈமப்பேழை போன்ற பொருட்கள் உள்ளிட்டவைகள் கிடைத்தன. இதையறிந்த அப்பகுதி மக்கள் அங்கு திரண்டனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் பிரபுவிடம் தெரிவித்தார்.


அவர் திருப்பத்தூர் தாசில்தாருக்கு தெரிவித்தார். அதன்பேரில் தாசில்தார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தார். மேலும் இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் மற்றும் தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வருபவரான ஆ.பிரபுவும் சம்பவ இடம் வந்து பார்த்து ஆய்வு செய்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாக இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.


அதாவது பெருங்கற்காலத்தைச் சேர்ந்த அக்கால மக்கள் தங்களுள் மிக முக்கியமானவர்கள் இறக்கும் தருவாயில் அவர்களை நிலத்திற்கு அடியில் அடக்கம் செய்யும்போது அவர்கள் பயன்படுத்திய புழங்கு பொருட்களையும் உடன் வைத்து அடக்கம் செய்யும் மரபு இருந்துள்ளது. அந்த வகையில் இந்த இடத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் கருப்பு சிவப்பு மண்பாண்டங்கள் மற்றும் ஈம பிழை உடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவை யாவும் இந்த திருப்பத்தூர் மாவட்டத்தின் முற்கால வரலாற்றினை எடுத்துரைப்பதாக இருக்கிறது. தமிழக அரசின் தொல்லியல் துறையும் இந்த இடத்தில் முறையான அகழாய்வினை மேற்கொள்ளும்போது மேலும் பல அறிய உண்மைகள் வெளி வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

04 February 2024

திருக்கோவிலூா் அருகே கண்டறியப்பட்ட கொற்றவை சிற்பம்

திருக்கோவிலூா் அருகே பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.


கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.குன்னத்தூா் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, சிற்றிங்கூா் ராஜா, திருவாமாத்தூா் கண.சரவணகுமாா் உள்ளிட்டோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது:


இங்குள்ள ஏரிக்கரை எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பாா்த்தவாறு கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. 6 அடி உயரம், 2 அடி அகலமுள்ள இந்தச் சிற்பத்தில் கொற்றவை வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மாா்பு, இடுப்பில் ஆடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடையில் நோ்த்தியான மடிப்புகள் காணப்படுகின்றன. தோள்களில் வளைகள், காலில் கழல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 


8 கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புற 4 கைகள் அபய முத்திரை, அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. இடப்புற 4 கைகளில் ஒன்று இடுப்பில் வைத்தவாறும், மற்ற கைகள் சங்கு, வில், கேடயம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளன. சிற்பத்தின் இடை பகுதியில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத் தலையின் மீது அமைந்துள்ளது.


சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. சிற்ப அமைப்பு, அதிலுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளை கொண்டு அதன் காலம் 6-ஆம் நூற்றாண்டின் இறுதியை (பல்லவா் காலத்தை) சோ்ந்ததாக இருக்கலாம் என அறிய முடிகிறது. சிற்பத்தின் வலப்புறமுள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இதில் ‘பெருவா இலாா் மகன் தோறன்’ என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இது கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கலாம்.


தமிழ்நாட்டில் திருக்கோவிலூா் பகுதியில்தான் அதிகளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இந்தப் பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இதுபோன்ற அரிய சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

03 February 2024

வயல்வெளியில் காளி சிற்பங்கள், கொற்றவை சிலை கண்டெடுப்பு - செஞ்சியில் கிடைத்த பொக்கிஷம்

செஞ்சி அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய கொற்றவை கண்டறியப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , ஆலம்பூண்டியை அடுத்த திக்காமேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காளி சிற்பம் ஒன்று இருப்பதாகத் சந்திரன் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். 


செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ரெட்டிபாளையத்தின் வடக்கே உள்ள திக்காமேடு கிராமத்தின் வயல்வெளியின் மத்தியில் உயர்ந்த மேடை மேலே இரண்டு பலகை கல்லால் ஆன காளி சிற்பங்கள் காணப்பட்டது. அவ்விரண்டில் இடது புறம் உள்ள சிற்பம் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அச்சிற்பம் கொற்றவை சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. 


போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற தலைப்பாரம் கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் மணிமாலையுடன் கூடிய ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். 


நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும் கீழ் வலது கரம் அருள் பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் , கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன் தொடையைத் தாண்டி நீள , காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.


இக்கொற்றவையின் சிற்பபமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாகக் கருதலாம். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிக்கப்பட்டுள்ள நிலையில் , சதுர் புஜமாகக் காட்சி தருவது மிகவும் சொற்பமாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று ஆலம்பூண்டியை அடுத்த தூரம்பூண்டி கிராமத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று சிதைந்த நிலையில் , வயலுக்கு மத்தியில் இன்றும் சிறப்புற வழிபடப் படுகிறது. அவ்வூர் மக்கள் வீட்டு விசேஷங்கள் தொடங்கி , நிலத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை என எல்லா நிகழ்வுகளிலும் இக்கொற்றவையை வணங்கியே எல்லா காரியங்களையும் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறது. இச்சிற்பத்தை ஊர்மக்கள் முறையாகப் பாதுகாத்து வழிபட்டு வந்தால், அவ்வூரின் தொன்மை காக்கப்படும். 

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts