Home

03 February 2024

வயல்வெளியில் காளி சிற்பங்கள், கொற்றவை சிலை கண்டெடுப்பு - செஞ்சியில் கிடைத்த பொக்கிஷம்

செஞ்சி அருகே 8 ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் காலத்திய கொற்றவை கண்டறியப்பட்டுள்ளது. 


திருவண்ணாமலை மரபுசார் அமைப்பைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா இணைந்து செஞ்சி பகுதியில் கள ஆய்வு மேற் கொண்ட பொழுது , ஆலம்பூண்டியை அடுத்த திக்காமேடு கிராமத்தில் உள்ள வயல்வெளியில் காளி சிற்பம் ஒன்று இருப்பதாகத் சந்திரன் அவர்கள் அளித்த தகவலின் பெயரில் ஆய்வு மேற்கொள்ளச் சென்றனர். 


செஞ்சி - திருவண்ணாமலை சாலையில் உள்ள ரெட்டிபாளையத்தின் வடக்கே உள்ள திக்காமேடு கிராமத்தின் வயல்வெளியின் மத்தியில் உயர்ந்த மேடை மேலே இரண்டு பலகை கல்லால் ஆன காளி சிற்பங்கள் காணப்பட்டது. அவ்விரண்டில் இடது புறம் உள்ள சிற்பம் சுமார் 5 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் நான்கு கரங்களுடன் புடைப்பு சிற்பமாக வடிக்கப்பட்டுள்ள அச்சிற்பம் கொற்றவை சிற்பம் என்பது கண்டறியப்பட்டது. 


போர்வீரர்கள் அணியும் கவசம் போன்ற தலைப்பாரம் கரண்ட மகுடத்துடன் தலையை அலங்கரிக்க , நீள் வட்டமான முகத்தில் தடித்த உதடுகளும் இரு செவிகளில் பத்ர குண்டலும் அணிந்து காட்சி தருகிறார். கழுத்தில் மணிமாலையுடன் கூடிய ஆரம் போன்ற அணிகலன்களையும் தனது அனைத்து கரங்களிலும் தோள்வளை மற்றும் கைவளையுடன் மார்பில் பட்டையான கச்சை அணிந்து காட்சியளிக்கிறார். 


நான்கு கரங்களில் தனது மேல் வலது கரம் சக்கரத்தையும் கீழ் வலது கரம் அருள் பாலிக்கும் அபய முத்திரையிலும் , மேல் இடது கரத்தில் சங்கும் , கீழ் இடது கரம் இடைமீது ஊறு முத்திரையில் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் இடையாடை பெரிய முடிச்சுகளுடன் தொடையைத் தாண்டி நீள , காலருகே இருபக்கமும் வீரர்கள் வடிக்கப்பட்டு எருமை தலையின் மீது நிமிர்ந்து கம்பீரமாக நின்றவாறு காட்சி தருகிறது.


இக்கொற்றவையின் சிற்பபமைதி, ஆடை மற்றும் அணிகலன்களை வைத்து இதன் காலம் கி.பி 8ம் நூற்றாண்டாகக் கருதலாம். 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவைகள் பெரும்பாலும் அஷ்ட புஜங்களுடன் வடிக்கப்பட்டுள்ள நிலையில் , சதுர் புஜமாகக் காட்சி தருவது மிகவும் சொற்பமாக ஆவணம் செய்யப்பட்டுள்ளது.


இதே போன்று ஆலம்பூண்டியை அடுத்த தூரம்பூண்டி கிராமத்தில் அஷ்ட புஜங்களுடன் கூடிய 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்று சிதைந்த நிலையில் , வயலுக்கு மத்தியில் இன்றும் சிறப்புற வழிபடப் படுகிறது. அவ்வூர் மக்கள் வீட்டு விசேஷங்கள் தொடங்கி , நிலத்தில் விதைப்பு முதல் அறுவடை வரை என எல்லா நிகழ்வுகளிலும் இக்கொற்றவையை வணங்கியே எல்லா காரியங்களையும் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.


சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான இக்கொற்றவை இன்றும் வயல்வெளியின் மத்தியில் வெட்ட வெளியில் வளமையைக் காக்கும் தெய்வமாக அருள்பாலித்து வருகிறது. இச்சிற்பத்தை ஊர்மக்கள் முறையாகப் பாதுகாத்து வழிபட்டு வந்தால், அவ்வூரின் தொன்மை காக்கப்படும். 

No comments:

Post a Comment

Featured Post

சிந்தனைக் களம் - 3

வெற்றிக்குத் தேவை இலக்கு வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒ...

Popular Posts