வெற்றிக்குத் தேவை இலக்கு
வெற்றி என்பது தேர்ந்தெடுத்த ஒரு இலக்கை அடைவதன் மூலம் தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும் ஒரு செயலாகும். தான் வெற்றிபெற வேண்டும் என்று நினைக்காத மனிதர்களே இல்லை. எனவே வெற்றியானது ஒவ்வொரு மனிதனுக்குமான அடிப்படைத் தேவையாக உள்ளது.
ஒருவன் வெற்றிபெற வேண்டுமெனில் முதலில் இலக்கைத் தேர்வு செய்ய வேண்டும். பின்னர் இலக்கை அடைவதற்கான சரியான வழியை கண்டறியும் முயற்சியில் இறங்க வேண்டும். தொடர் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இலக்கை அடைந்து இறுதியாக வெற்றியைச் சுவைக்க முடியும். முயற்சியும் பயிற்சியும் சரியாக அமைந்தால் நூறு சதவீதம் வெற்றி நிச்சயம்.
இதற்கு கிரிக்கெட் விளையாடும் ஒரு பந்துவீச்சாளரை நாம் உதாரணமாகச் சொல்லலாம். பேட்ஸ்மேனுக்கு பின்புறம் உள்ள குச்சிகளைத் தாக்க வேண்டும் என்பதே ஒரு பந்து வீச்சாளரின் இலக்கு. புதிதாகப் பந்துவீசப் பழகும் ஒருவர் முதல்முறையே நேராக குச்சிகளை தாக்குவதில்லை. முதல்முறை பந்துவீச முயற்சி செய்து பார்க்கிறார். அது அகலப் பந்தாகச் (வைட் பால்) சென்றுவிடுகிறது. ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. பயிற்சியாளர் ஒருவரின் உதவியோடு அதை தொடர்ந்து முயற்சி செய்து பார்க்கிறார். அதன்மூலம் அவருக்கு முழுமையானப் பயிற்சி கிடைக்கிறது. இறுதியில் பந்து இலக்கைத் தாக்குகிறது. குச்சிகள் சிதறுகின்றன. முயற்சியும் பயிற்சியும் சரியாக அமைந்ததால் அவருக்கு வெற்றி கிடைத்தது. என்னால் முடியவில்லை என்று முதல் முயற்சியிலேயே பின்வாங்கி இருந்தால் இந்த வெற்றி அவருக்கு கிடைக்காமல் போயிருக்கும்.
நான் ஒரு மாவட்ட ஆட்சியராக வேண்டும், காவல்துறை அதிகாரியாக வேண்டும், மருத்துவராக வேண்டும், ஆசிரியராக வேண்டும், வங்கி மேலாளராக வேண்டும், விளையாட்டு வீரராக வேண்டும். இப்படி நீ என்னவாக வேண்டும் என்ற ஒரு இலக்கை முதலில் தேர்வு செய்ய வேண்டும். பிறகு ஆசிரியர்களின் வழிகாட்டுதல்படி முயற்சியும் பயிற்சியும் செய்தால் எதிர்காலத்தில் நாம் ஒரு நினைத்த பதவியை அடையலாம்.
நாளை நீ என்னவாக வேண்டும் என்பதை இன்றே தேர்வு செய்ய வேண்டும். காலம் கடந்த பிறகு சிந்திப்பது பயனற்ற ஒன்றாக மாறிவிடும். ஏனென்றால் ஒவ்வொரு தேர்வுக்கும் ஒரு குறிப்பிட்ட வயதுத் தகுதி நிர்ணயிக்கப்படுகிறது. உதாரணமாக ஐ.ஏ.எஸ் தேர்வு 35 வயதுக்கு மேல் எழுத முடியாது. அதனால் 35 வயதிற்கு மேல் நான் ஐ.ஏ.எஸ். ஆக வேண்டும் என்று சிந்திக்க முடியாது. அப்போது அதற்கான வயதுத் தகுதி முடிந்துவிட்டு இருக்கும்.
அ. அறிவழகன் M.A, M.Phil, M.Ed,
வரலாறு முதுகலை ஆசிரியர்