அங்கம்
கிழக்கு பீகாரில் உள்ள மாங்கீர் மற்றும் பாகல்பூர் ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாக அங்கம் இருந்தது. இதன் தலைநகரம் சம்பா அல்லது மாலினி. இது சம்பா என்ற ஆற்றின் பெயரால் அழைக்கப்பட்டது. அங்க நாட்டில் சம்பா, கங்கை ஆகிய இரு ஆறுகள் பாய்ந்தன. இவ்விரு ஆறுகளும் சங்கமிக்கும் இடத்தில்தான் சம்பா நகரம் அமைந்திருந்தது.
எனவே அது ஒரு சிறந்த வணிக மையமாகத் திகழ்ந்தது. இப்பகுதி மக்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள சொர்ணபூமி வரைச் சென்று வியாபாரம் செய்தனர். அவர்களில் சிலர் இந்தோசீனா சென்று குடியேறினர். புத்தரது காலத்தில் இருந்த ஆறு பெரிய நகரங்களில் ஒன்றாக சம்பா விளங்கியது. இங்கு நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில் NBPW (Northern Black Polished Ware) வடக்கு கருப்பு சாயம் பூசப்பட்ட மட்பாண்ட பண்பாட்டைச் சேர்ந்தப் பொருட்கள் அதிகளவில் கண்டறியப்பட்டுள்ளன.அங்கம், மகத நாட்டுக்கு கிழக்கே அமைந்திருந்தது. அங்கம், மகதம் ஆகிய இரு நாடுளையும் சம்பா நதி பிரித்தது. இவ்விரு நாடுகளிடையே நெடுங்காலமாக போர்கள் நடந்து வந்தன. புத்தரின் சமகால அங்க அரசன் பிரம்மதத்தா. மகத அரசன் பிம்பிசாரன் அங்கம் மீது படையெடுத்து சென்றான். பிரம்மதத்தனைக் கொன்றுவிட்டு அங்க நாட்டை மகதத்துடன் இணைத்துக் கொண்டான்.
காசி
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக காசி இருந்தது. இதன் தலைநகரம் வாரணாசி. தற்போது பனாரஸ் என்றும் அழைக்கப்படுகிறது. வருணா மற்றும் அசி ஆகிய இரு நதிகளின் பெயர்கள் இணைத்ததே வாரணாசி. இது கங்கை ஆறும் கோமதி ஆறும் சங்கமிக்கும் இடத்தில் அமைந்திருந்தது. காசி ஆடைகள் உற்பத்தி மையமாக மலர்ந்தது. பௌத்தத் துறவிகள் அணிந்த கசாயா என்ற காவி நிற ஆடைகள் அங்கு உற்பத்தி செய்யப்பட்டன. எனவே காசி ஒரு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த இடமாக மாறியது. புத்தரது காலத்து காசியின் பழம்பெருமையைப் பற்றி ஜாதகக் கதைகள் கூறுகின்றன.
ஆரம்பத்தில் காசி ஒரு வலிமை வாய்ந்த அரசாக இருந்தது. பின் வேதகாலத்தில் இருந்த விதேக அரசை வீழ்த்துவதில் அது முக்கியப் பங்கு வகித்தது. பின்னர் அங்கம், கோசலம் ஆகிய இரு அரசுகளுடன் ஆதிக்கப் போட்டியில் இறங்கியது. அஷ்வசேனா காசியின் ஆரம்ப கால அரசராக இருந்தார். அவரது மகன் பார்சுவநாதர் இளவரசராக இருந்தார். பார்சுவநாதர் சமணப் பரமபரையில் வந்த 23 வது தீர்த்தங்கரர் ஆவார்.
காசி, கோசலம் இடையே நீண்டகாலப் போர்கள் நடைபெற்றன. புத்தர் பிறப்பதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு காசியின் அரசராக பிரம்மதத்தா இருந்தார். அவர் கோசலம் மீது போர் தொடுத்தார். அப்போரில் கோசல அரசர் திகிதி வீழ்த்தப்பட்டார். கோசலம் காசியுடன் இணைக்கப்பட்டு பிறகு திகிதியின் மகனிடம் திரும்பத் ஒப்படைக்கப்பட்டது. கோசலத்தை ஆண்ட வாங்கா, தப்பசேனா, கம்சா ஆகியோரது ஆட்சியில் காசியின் மீது பதில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இறுதியில் புத்தரது காலத்தில் காசி கோசலத்துடன் இணைக்கப்பட்டது.
No comments:
Post a Comment