குரு
டெல்லி, மீரட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக குரு இருந்தது. அதன் தலைநகரம் இந்திரப்பிரஸ்தம். மற்றொரு முக்கிய நகரம் ஹஸ்தினாபுரம். குரு அரசு வேதகாலத்தில் பெரும் செல்வாக்குடன் இருந்தது.
ஆனால் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தனது அரசியல் முக்கியத்துவத்தை இழந்து காணப்பட்டது. குரு அரசர்கள் யுதிஷ்டிரரின் வழித்தோன்றல்கள் எனக் கருதப்படுகிறது. இங்கு துவக்கத்தில் முடியாட்சி முறை நிலவியது. பின்னர் கண சங்கங்களின் கூட்டாட்சி அரசு மலர ஆரம்பித்தது. குரு நாட்டை ஆண்ட அரசக் குடும்பங்கள் இடையே நடைபெற்ற போர்களைப் பற்றி மகாபாரதம் விளக்குகிறது. புத்தரது காலத்தில் குரு மற்றும் பாஞ்சாலம் சிற்றரசுகளாக மாறின. எனினும் இவ்விரு நாடுகளிடையே நட்புறவு காணப்பட்டது.பாஞ்சாலம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ரோஹில்கண்ட் பகுதியை உள்ளடக்கியதாக பாஞ்சாலம் இருந்தது. தற்போதைய பரெய்லி, பதௌன், புலந்த்சாஹிர் ஆகியவற்றை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்திருந்தது. கங்கை ஆறு பாஞ்சால நாட்டை இரண்டாகப் பிரிந்தது. அதன் வடக்குப் பகுதியின் தலைநகரம் அஹிச்சாத்ரா (தற்கால பிரெய்லி); தெற்குப் பகுதியின் தலைநகரம் காம்பில்யா (தற்கால பரூகாபாத்). மிகவும் வளமான கன்னோசி நகரம் பாஞ்சாலத்தின் ஒரு பகுதியாக இருந்தது. துர்முகன், சுலானி பிரம்மதத்தா ஆகியோர் பாஞ்சாலத்தை ஆண்ட சிறந்த அரசர்களாவர். ஆரம்ப கால அரசரான துர்முகன் அனைத்து திசைகளிலும் படையெடுத்துச் சென்றுள்ளார். இங்கு துவக்கத்தில் முடியாட்சி முறை நிலவியது. பின்னர் கண சங்கங்களின் வருகையால் கூட்டாட்சி முறை மலர ஆரம்பித்தது. பாஞ்சால நாட்டிலிருந்த முக்கிய வணிக மையத்தை புத்தர் பார்வையிட்டார்.
மத்ஸயம்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூர், ஆல்வார், பரத்பூர் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக மத்ஸயம் இருந்தது. இதன் தலைநகரம் விராட் நகர் (தற்கால பைராட்). விராட் நகர் பாண்டவர்கள் மறைந்திருந்த பகுதியாகக் கருதப்படுகிறது. மத்சயம் அரசை நிறுவியவர் விராடன். இது குரு நாட்டுக்கு தெற்கிலும், யமுனை ஆற்றுக்கு மேற்கிலும் அமைந்திருந்தது. பிற்காலத்தில் இங்குதான் ஜெய்ப்பூர் அரசு தோன்றியது.
சூரசேனம்
உத்திரப்பிரதேசத்தில் உள்ள மதுராவைச் சுற்றியுள்ள பகுதிகளில் சூரசேனம் அமைந்திருந்தது. மத்சயம் நாட்டிற்கு தெற்கே இருந்தது. சூரசேனத்தை யாதவ குலம் ஆட்சி செய்தது. அதன் தலைநகரம் மதுரா ஆகும். மதுரா யமுனை ஆற்றின் கரையில் வடக்கிலிருந்து தெற்கு செல்லும் வணிகப் பாதையின் நடுவில் அமைந்திருந்தது. பகவான் கிருஷ்ணர் மதுராவை ஆண்ட யாதவர்களின் விருஷ்னி குலத்தைச் சேர்ந்தவர். சூரசேன அரசர் அவந்திபுத்திரன் புத்தரின் சீடர்களில் ஒருவராக விளங்கினார். இவர் அவந்தி நாட்டை ஆட்சி செய்த பிரத்யோதாவின் வழிவந்தவர் ஆவார். சூரசேனத்தில் கணசங்கத்தின் மூலம் வழிநடத்தப்பட்ட கூட்டாட்சி அரசு நிலவியது.
No comments:
Post a Comment