வத்சம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அலகாபாத்தைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக வத்சம் இருந்தது. வத்சம் யமுனை ஆற்றின் வலது கரையில் அமைந்து இருந்தது. அங்கு நேர்த்தியான பருத்தி ஆடைகள் உற்பத்தி செய்யப்பட்டன. இதன் தலைநகரம் கௌசாம்பி அல்லது கோசாம்பி. இது அலகாபாத்திற்கு தெற்கே சுமார் 38 மைல்கள் (அதாவது 64 கி.மீ.) தொலைவில் தற்போதுள்ள கோசம் என்ற இடத்தில் அமைந்திருந்தது.
கௌசாம்பி ஒரு சிறந்த வணிக மையமாகவும், மேற்கிலும் தெற்கிலும் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை வைக்கும் இடமாகவும் இருந்தது. கௌசாம்பி மற்றும் உஜ்ஜயினி இடையே வாணிபம் நடைபெற்றது. வேத காலத்தில் குரு குலமும், பரத குலமும் இப்பகுதியில் வசித்து வந்தன. ஹஸ்தினாபுரம் வெள்ளத்தில் மூழ்கியதால் பாண்டவர்களின் வழித்தோன்றல்கள் தமது தலைநகரத்தை கௌசாம்பிக்கு மாற்றிக் கொண்டனர் என புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் இங்குள்ள ஷ்ரிங்வேர்பூர் என்ற இடத்தில்தான் இராமர் கங்கை ஆற்றைக் கடந்தார் என இராமாயணம் கூறுகிறது.
உதயணன்
வத்ச நாட்டு அரசன் சதானிக பராந்தபன். பரத குலத்தைச் சேர்ந்தவர். இவரது மகன் உதயணன் அல்லது உதேனா. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வத்ச நாட்டை ஆண்டு வந்தார். உதயணன் போர் புரிவதை விரும்பினார். அவர் மிகப்பெரிய இராணுவத்தையும் யானைப் படையையும் பெற்றிருந்தார். தனது படைகளை எப்போதும் போர் முனையில் நிறுத்தி வைத்திருந்தார். எல்லையைச் சுற்றி பல கோட்டைகளைக் கட்டினார். உதயணன் தனது அண்டை நாடுகளுடன் சுமூகமான உறவு கொள்ளவில்லை. அவர், மகத அரசன் அஜாதசத்ரு, அவந்தி அரசன் பிரத்யோதா ஆகிய இருவருடனும் போரிட்டு வந்தார். கோசல நாட்டுடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார். கலிங்கத்தை வெற்றி கொண்டார். அவரது ஆதிக்கம் பார்கஸ் வரை பரவி இருந்தது.
உதயணன் அவந்தியின் மீது போர்த் தொடுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக அவர் தோல்வியைத் தழுவினார். அவந்தி அரசன் பிரத்யோதா அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தான். அங்கு உதயணன் மற்றும் இளவரசி வாசவதம் இடையே காதல் மலர்ந்தது. ஆனால் பிரத்யோதா இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். எனவே உதயணன் சிறையிலிருந்து தப்பிச் செல்லும்போது வாசவதத்தையும் உடன் அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார். பிற்காலத்தில் இதை மையமாக வைத்து பாசா எழுதிய "ஸ்வப்ன வாசவதத்தா", ஹர்ஷர் எழுதிய "இரத்னாவளி", மற்றும் "பிரியதர்ஷிகா" ஆகிய மூன்று சமஸ்கிருத நாடகங்கள் இயற்றப்பட்டன. உதயணன், அங்க நாட்டு அரசன் திரிதவர்மன் மகளையும் மகத நாட்டு அரசன் தர்சகன் மகள் பத்மாவதி என்பவரையும் திருமணம் செய்து கொண்டார்.
உதயணன் வேட்டையாடுவதில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். அதற்கென தனியாக காடுகளை வைத்திருந்தார். அவர் ஆரம்பத்தில் பௌத்த மதத்தை எதிர்த்தார். எனவே உதயணன் பௌத்த மதத்தின் கொடிய பகைவனாகக் கருதப்பட்டார். ஆனால் பின்டோலா என்ற பௌத்த துறவியைச் சந்தித்தப் பிறகு, அவர் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டார். அதை அரசு மதமாகவும் அறிவித்தார். கோஷிதராமா என்ற பௌத்த மடாலயம் கௌசாம்பி நகரத்தில் அமைந்துள்ளது. அதன்மூலம் இந்நகரம் ஒரு பௌத்த மையமாக திகழ்ந்ததை அறியலாம்.
உதயணன் திருமண ஒப்பந்தங்கள் மூலமும் வலிமையான இராணுவத்தின் துணையோடும் வத்ச நாட்டை பகைவர்களிடம் இருந்து பாதுகாத்து வந்தார். ஆனால் அவரது மகன் போதிகுமாரா ஆட்சியில் வத்சம் வலிமை இழந்து காணப்பட்டது. அப்போது அவந்தியை ஆண்டு வந்த பிரத்யோதா மகன் பாலகா வத்ச நாட்டை கைப்பற்றிக் கொண்டார் என்று "கதாசரித்சாகரா" என்ற சமஸ்கிருத நூல் கூறுகிறது. இறுதியில் வத்சம் அவந்தியோடு இணைக்கப்பட்டது.
Prepared By
A. ARIVAZHAGAN, M.A., M.Phil., M.Ed.,
PG Teacher, Ranipet District
Cell - 9944573722
No comments:
Post a Comment