கோசலம்
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக கோசலம் இருந்தது. மேற்கே கோமதி நதிக்கும் கிழக்கே சதாநிரா நதிக்கும் இடையே அமைந்திருந்தது. சராயு நதி கோசலத்தை இரண்டாகப் பிரித்தது. வடக்கே சிராஸ்வதியும் தெற்கே குஷாவதியும் அதன் தலைநகரங்களாக இருந்தன. தற்போதைய சகேத்-மகேத் பகுதியே சிராஸ்வதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. சகேத் என்பது பண்டைய ஜேதாவனம் மடாலயம் இருந்த இடத்தையும் மகேத் என்பது நகரத்தையும் குறிக்கிறது. சேதி அனாதபிண்டிகா என்பவரால் புத்தருக்கு கொடையாக ஜேதாவனம் வழங்கப்பட்டதாக பௌத்த இலக்கியங்கள் கூறுகின்றன. ஆரம்பத்தில் அயோத்தி, சாகேதா, கபிலவஸ்து, குஷாவதி மற்றும் சிராஸ்வதி என ஐந்து சுதந்திர அரசுகள் இருந்தன. இவற்றை ஒருங்கிணைத்தே கோசலம் உருவானது. புராண காலத்தில் இராமர் அயோத்தியைத் தலைநகராகக் கொண்டு கோசலத்தை ஆண்டு வந்தாரென இராமாயணம் கூறுகிறது.
பிரசேனஜித் :
கோசலத்தை ஆட்சி செய்தவர்கள் இக்ஷவாகு வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என புராணங்கள் கூறுகின்றன. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் மகா கோசலர் என்ற அரசன் கோசலத்தை ஆண்டு வந்தான். அவரது காலத்தில் கோசலம் ஒரு வலிமைமிக்க நாடாக உருவெடுத்தது. அதன்பிறகு கோசலரின் மகன் பிரசேனஜித் (பசேனடி) அரசரானார். அவரது தலைநகரம் சிராஸ்வதி. பிரசேனஜித் தச்சசீலத்தில் கல்வி பயின்றார். அவரது அமைச்சர்களாக மிருகதாரா, ஸ்ரீவத்தா மற்றும் திகா சாராயணா ஆகியோர் இருந்தனர்.
பிரசேனஜித்தின் சகோதரியை மகதத்தை ஆண்டு வந்த பிம்பிசாரர் மணந்தார். அவருக்கு திருமணப் பரிசாக காசி வழங்கப்பட்டது. அஜாதசத்ரு மகதத்தின் அடுத்த அரசனாக விரும்பி, தனது தந்தை பிம்பிசாரரைக் கைது செய்து சிறையில் அடைத்துக் கொன்றான். எனவே காசியை திரும்ப ஒப்படைக்குமாறு பிரசேனஜித் உத்தரவிட்டார். அதற்கு அஜாதசத்ரு மறுத்ததால் இருவருக்கும் போர் மூண்டது. போரில் வெற்றி பெற்ற அஜாதசத்ரு பிரசேனஜித்தின் மகள் வஜிராவை திருமணம் செய்து கொண்டார்.
பிரசேனஜித் புத்தரையும் அவர் பிறந்த சாக்கிய குலத்தையும் பெரிதும் மதித்து வந்தார். அதனால் சாக்கிய இளவரசியை தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு சாக்கியக் குலத் தலைவரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் கோசல அரசனுக்கு பெண் கொடுக்க விரும்பவில்லை. எனவே வாசபா காத்தியா என்ற அடிமைப் பெண் ஒருத்தியை இளவரசியாக நடிக்க வைத்து திருமணம் செய்து கொடுத்தார். இவர்களுக்கு விதூதபன் என்ற மகன் பிறந்தான். இந்த உண்மை தெரிய வந்தததும் பிரசேனஜித் தனது மனைவியையும் மகனையும் ஒதுக்கினார். ஆனால் புத்தர்ஈஏஒ தலையிட்டு சமாதானம் செய்து வைத்த பிறகு அவர்களை ஏற்றுக் கொண்டார்.
பிரசேனஜித் தனது முதுமை காலத்தில் புத்தரைக் காண சாக்கிய நாடு சென்றார். அச்சமயத்தில் விதூதபன், திகா சாராயனா என்ற அமைச்சரின் உதவியுடன் தனது தந்தைக்கு எதிராகப் புரட்சி செய்து கோசலத்தின் அரியணையைக் கைப்பற்றினான். உதயணன் எப்படியாவது நாட்டை மீட்க வேண்டும் என்ற எண்ணத்தில் அஜாதசத்ருவின் உதவியை நாடி ராஜகிருகம் சென்றார். ஆனால் எதிர்பாராத விதமாக கோட்டை வாயில் மூடப்பட்டு இருந்தது. நீண்டதூரப் பயணம், முதுமை, உடல் சோர்வு ஆகியவற்றின் காரணமாக பிரசேனஜித், இராஜகிருகம் கோட்டை வாயிலில் இறந்துக் கிடந்தார். அவரது உடலை அஜாதசத்ரு நல்லடக்கம் செய்தார்.
பிரசேனஜித், புத்தரின் சமகாலத்தவர். இவர்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடல்கள் குறித்த பல செய்திகள் பௌத்த இலக்கியங்களில் காணப்படுகின்றன. புத்தர் ஒரு கோசலர் என மஜ்ஜிம நிகாயம் கூறுகிறது. அதற்கு காரணம் புத்தர் பிறந்த இடம் கோசல நாட்டின் ஆதிக்கத்தின்கீழ் இருந்தது. பிரசேனஜித், பௌத்த மதத்தை ஆதரித்தார். பௌத்த துறவிகளுக்கான மடாலயங்களைக் கட்டிக் கொடுத்தார். பிராமண மதத்தையும் ஆதரித்தார். பிராமணர்கள் இருவருக்கு இரண்டு நகரங்களைத் தானமாக கொடுத்தார். எனவே பிரசேனஜித் தானத்துக்கு பெயர் பெற்றவராக் கருதப்பட்டார். அவரது காலத்தில் அங்குலிமாலா என்ற கொள்ளையர்களின் தொல்லை இருந்தது.
பிரசேனஜித்துக்குப் பிறகு விதூதபன், குலகா, சுரதா, சுமித்ரா ஆகியோர் கோசலத்தை ஆட்சி செய்தனர். ஆனால் அவர்களைப் பற்றி முழுமையானத் தகவல் இல்லை. விதூதபன் அரசனானதும் தனது தந்தையை ஏமாற்றி அடிமைப் பெண்ணை திருமணம் செய்து வைத்தவர்களைப் பழிவாங்கத் துடித்தான். அதற்காக சாக்கியர்கள் மீது படையெடுத்துச் சென்று பலரைக் கொன்று குவித்தான். அவர்களது நாட்டை கோசலத்துடன் இணைத்துக் கொண்டான். விருத்தகா அல்லது சூத்ரகா என்றும் விதூதபன் அழைக்கப்பட்டான். அஜாதசத்ரு கோசலத்தை தன்னிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். அதற்கு கோசல அரசன் மறுத்தான். எனவே இருவருக்கும் இடையே போர் மூண்டது. போரில் வெற்றி பெற்ற அஜாதசத்ரு கோசலத்தைக் கைப்பற்றி இணைத்துக் கொண்டான். அதன்பிறகு மகத நாட்டின் ஒரு பகுதியாக கோசலம் மாறியது.
A. ARIVAZHAGAN, M.A., M.Phil., M.Ed.,
PG Teacher, Ranipet District
Cell - 9944573722
No comments:
Post a Comment