Home

06 August 2021

10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு அலகு 1 அறிமுகம்

 1. முதல் உலகப் போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்

அறிமுகம் : 

அனைவருக்கும் வணக்கம்.  முதலில் ஒரு சிறு கேள்வியுடன் தொடங்கலாம். வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுபவை எவை? 

🖍️உலகில் நடைபெற்ற எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் அது எந்த இடத்தில் நடைபெற்றது எந்த ஆண்டு நடைபெற்றது என்று கட்டாயம் வரலாற்றில் குறிப்பிடப்பட்டு இருக்கும். இவை இரண்டும் இல்லாமல் வரலாறு எழுத முடியாது. அதன் காரணமாகத் தான் இடம் மற்றும் காலம் ஆகிய இரண்டும் வரலாற்றின் இரு கண்கள் என்று அழைக்கப்படுகின்றது. 

🖍️வரலாற்றில் பொதுவாகவே ஒரு குறிப்பிட்ட நிகழ்வை மையமாகக் கொண்டு இது இன்னாருடைய சகாப்தம் அல்லது இன்னாருடைய காலகட்டம் என்று அழைக்கும் வழக்கம் உள்ளது. உதாரணமாக காந்தி சகாப்தத்தை‌ கூறலாம். இந்திய விடுதலை போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய மகாத்மா காந்தியடிகள் 1915 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடு திரும்பினார். அதன் பிறகு பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னின்று நடத்தி இந்தியாவுக்கு விடுதலை கிடைக்க முக்கிய காரணமாக திகழ்ந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக 1948 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். அதனால் தான் 1915 முதல் 1948 ஆம் ஆண்டு வரை உள்ள இடைப்பட்ட காலத்தை இந்திய வரலாற்றில் காந்தி சகாப்தம் என்று நாம் அழைக்கிறோம். 

🖍️அதே போலத் தான் கி.பி. 1789 முதல் கி.பி. 1914 ஆம் ஆண்டு வரை உள்ள காலகட்டத்தை நீண்ட பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அழைக்கின்றனர். அதற்கு காரணம் 1789 ஆம் ஆண்டு பிரஞ்சு புரட்சியின் போது தொடங்கிய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த நடவடிக்கைகள் 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் ஆரம்பிக்கும் வரை சுமார் 125 ஆண்டுகள் நீடித்தது. 

🖍️"பிரான்ஸ் தும்மினால் ஐரோப்பாவிற்கே ஜலதோஷம் பிடிக்கும்" என்ற ஒரு புகழ்பெற்ற மேற்கோள் வரலாற்றில் உள்ளது. அதற்கான அர்த்தம் பிரான்சில் ஏதாவது ஒரு அரசியல் ரீதியான பிரச்சினை ஏற்பட்டால் அது ஐரோப்பா கண்டம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். 1789 ஆம் ஆண்டு தொடங்கிய பிரெஞ்சுப் புரட்சி அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெப்போலியனின் ஆட்சி ஆகிய இரண்டும் உலக வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வுகள் ஆகும். 

🖍️பிரெஞ்சு புரட்சியின் குழந்தை என்று வர்ணிக்கப்பட்ட நெப்போலியன் போனாபார்ட் 1804 ஆம் ஆண்டு பிரான்சின் பேரரசராக தனக்குத் தானே முடிசூட்டிக் கொண்டார். 1814 ஆம் ஆண்டு வரை ஆட்சி செய்த நெப்போலியன் இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளை தவிர்த்து ஐரோப்பியக் கண்டத்தில் இருந்த பெரும்பாலான நாடுகளையும் கைப்பற்றி தனது பேரரசுடன் இணைத்துக் கொண்டார். தான் கைப்பற்றிய நாடுகளின் ஆட்சிக் கட்டிலில் தனது உறவினர்களை அமர்த்தினார். அதனால் பிரான்சின் எல்லை விரிவடைந்தது. அதோடு பல நாடுகளின் எல்லைக் கோடுகள் மறைந்து போயின. 

🖍️மாவீரன் நெப்போலியனிடம் நாட்டை இழந்தவர்கள் அவரது வீழ்ச்சிக்குப் பிறகு உரிமை கோர ஆரம்பித்தனர். அதன் விளைவாக 1815 ஆம் ஆண்டு நடைபெற்ற வியன்னா மாநாட்டில் ஐரோப்பாவின் வரைபடம் மீண்டும் வரையப்பட்டது. பல நாடுகள் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டன. ஆனால் ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு நாடுகள் மட்டும் துண்டாடப்பட்டன. அவற்றுக்கு சொந்தமான நிலப்பகுதிகளை ஆஸ்திரியா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டன. 

🖍️பிரான்சில் நடைபெற்ற நிகழ்வுகளான 1830 ஆம் ஆண்டு ஜூலை புரட்சி மற்றும் 1848 ஆம் ஆண்டு பிப்ரவரி புரட்சி, 1871 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெர்மனி மற்றும் இத்தாலிய ஒருங்கிணைப்பு, 1894-95 களில் நடைபெற்ற ரஷ்ய - ஜப்பானியப் போர் மற்றும் இரகசிய ஒப்பந்தங்கள் ஆகியன ஐரோப்பிய வரலாற்றில் அமைதியற்ற சூழ்நிலையை உருவாக்கின. 1814 ஆம் ஆண்டு நெப்போலியனின் வீழ்ச்சிக்கு பிறகு ஆரம்பித்த அரசியல் சச்சரவுகள் 1914 ஆம் ஆண்டு முதல் உலகப்போர் தொடங்கும் வரை நீடித்தது. அதன் காரணமாகத் தான் முதல் உலகப் போருக்கான விதை சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாகவே ஊன்றப்பட்டுவிட்டது என்று வரலாற்றில் குறிப்பிடப்படுகிறது.  

🖍️உலகின் பல பகுதிகளில் தங்களது காலனிகளை நிறுவிய ஐரோப்பிய ஆதிக்க சக்திகள் உலகம் முழுவதையும் வெற்றி கொள்ள வேண்டும் என்ற பேராசையில் தங்களுக்குள் போர் புரிவதற்கு தயாராக இருந்தன. அது இறுதியாக 1914 ஆம் ஆண்டு ஆரம்பித்த முதல் உலகப்போருக்கு இட்டுச் சென்றது. இப்போர் இருபதாம் நூற்றாண்டின் போக்கையேத் தீர்மானிக்கும் வகையில் அமைந்ததால் 1914 ஆம் ஆண்டு உலக வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 

நன்றி 🙏🙏🙏

A. அறிவழகன் M.A., M.Phil, M.Ed., 

வரலாறு முதுகலை ஆசிரியர் 

No comments:

Post a Comment

Featured Post

Income Tax Form FY 2024 - 25 (Version 2.0) Date 20/12/2024 Old Regime and New Regime - By Arivazhagan

Income Tax Form Latest Version 2.0  (Old Regime and New Regime)  Financial Year 2024-25 (AY 2025-26)  Auto calculation is enabled in this So...

Popular Posts