பாண்டியர்கள் :
பாண்டியர்கள் மதுரையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் மீன். முற்காலப் பாண்டிய அரசர்கள் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் பாண்டிய அரசர்கள் என்ற பெயர் இடம்பெற்று உள்ளது. எனவே இக்கல்வெட்டு தமிழ்நாட்டில் பாண்டிய அரசு இருந்ததை உறுதி செய்கிறது. மாங்குளம் கல்வெட்டு, சின்னமனூர் செப்பேடுகள், வேள்விக்குடி செப்பேடுகள் மற்றும் தளவாயாபுரம் செப்பேடுகள் ஆகியவை பாண்டிய அரசர்கள் பற்றிக் கூறுகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக பாண்டிய அரசு பற்றி அறிய முடிகிறது.
பாண்டியர்கள் சங்கம் வைத்து தமிழ் வளர்த்தனர் என்று இறையனார் அகப்பொருள் உரை எழுதிய ஆசிரியர் கூறுகிறார். தென்மதுரையில் இயங்கிய முதற் சங்கத்தை 89 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். கபாடபுரத்தில் இயங்கிய இடைச் சங்கத்தை 59 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். தற்போதுள்ள மதுரையில் இயங்கிய கடைச் சங்கத்தை 49 பாண்டிய அரசர்கள் ஆதரித்தனர். பாண்டியர்களின் தலைநகரங்களான தென் மதுரையும், கபாடபுரமும் கடல் கொண்டு சென்றுவிட்டது. எனவே முடத்திருமாறன் பாண்டியர்களின் தலைநகரத்தை தற்போதுள்ள மதுரைக்கு மாற்றினார். மதுரையில் கடைச் சங்கத்தை நிறுவினார்.
பாண்டியர் மரபில் முற்காலப் பாண்டியர்கள், பிற்காலப் பாண்டியர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பாண்டிய அரசர்களே முற்காலப் பாண்டியர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் முதுகுடுமி பெருவழுதி, ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் ஆகியோர் சிறந்த அரசர்களாக கருதப்படுகினர்.
முதுகுடுமி பெருவழுதி :
முதுகுடுமி பெருவழுதி சிறந்த போர் வீரனாக இருந்தார். பல வேள்விகளை நடத்தினார். பல யாக சாலைகளை அமைத்துக் கொடுத்தார். எனவே பல்யாகசாலை முதுகுடுமி பெருவழுதி என்ற விருதுப் பெயரைப் பெற்றார்.
ஆரியப் படைகடந்த நெடுஞ்செழியன் :
* வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்று ஆரியப் படைகளை முறியடித்தார். எனவே ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார். இமயமலையில் பாண்டியர்களின் சின்னமான மீன் கொடியை நட்டார். ஆயினும் இப்படையெடுப்பு குறித்து உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை.
* சிலப்பதிகாரத்தின் தலைவன் கோவலனுக்கு தவறான தீர்ப்பு வழங்கினார். பின்னர் கோவலன் குற்றமற்றவன் என்று அறிந்த உடன் "யானோ அரசன் யானே கள்வன்" என்று கூறிவிட்டு, அரசவையிலேயே உயிர் துறந்தார். அதைக் கண்ட அவர் மனைவியும் உயிர் துறந்தார். எனவே அவர் "அரசக் கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியன்" என்று அழைக்கப்பட்டார். இவர் சேரன் செங்குட்டுவனின் சமகாலத்து அரசர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் :
சங்க காலப் பாண்டிய அரசர்களில் புகழ் மிக்கவர் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். இளம் வயதிலேயே அரியணை ஏறினார். மிகச் சிறந்த போர் வீரனாக விளங்கினார். தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் மாபெரும் வெற்றி பெற்றார். இப்போரில் சேர மன்னர் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழ மன்னர் பெருநற்கிள்ளி மற்றும் ஐந்து வேளிர் குலத் தலைவர்களின் கூட்டுப்படையை முறியடித்தார். எனவே தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார்.
முடிவு :
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக பாண்டியர்கள் மாறினர்.