சோழர்கள் :
சோழர்கள் உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். மாற்றுத் தலைநகரமாக புகார் இருந்தது. அவர்களின் சின்னம் புலி. முற்காலச் சோழ அரசர்களைப் பற்றி ஏராளமான செய்திகளை சங்க கால இலக்கியங்கள் தருகின்றன. அதில் எடுத்துத்தொகை, பத்துப்பாட்டு, சிலப்பதிகாரம் போன்றவை முக்கியப் பங்கு வகிக்கின்றன. சோழ அரசர்கள் என்ற பெயர் முதன் முதலாக அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டில் தான் இடம்பெற்று உள்ளது. இக்கல்வெட்டு மூலம் தமிழ்நாட்டில் சோழ அரசு இருந்தது உறுதியாகிறது. மேலும் இலங்கை நூலான மகாவம்சம், பிளினி, தாலமி, பெரிபுளூக்ஸ், மெகஸ்தனிஸ் போன்றோரின் குறிப்புகள் மூலமாக சோழ அரசு பற்றி அறிய முடிகிறது.
சோழர் மரபில் முற்காலச் சோழர்கள், பிற்காலச் சோழர்கள் என இரு பிரிவினர் உள்ளனர். அதில் சங்க காலத்தில் ஆட்சி புரிந்த சோழ அரசர்களே முற்காலச் சோழர்கள். இவர்கள் மூவேந்தர்களில் ஒருவராக இருந்தனர். அம்மரபில் இளஞ்சேட்சென்னி, கரிகாலன், பெருநற்கிள்ளி ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்களாவர்.
இளஞ்சேட்சென்னி :
இளஞ்சேட்சென்னி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்தார். அவர் வம்பர், வடுகர் ஆகிய இரு குறுநில அரசர்களை வெற்றி கொண்டார். அழகிய பல தேர்களை வைத்திருந்தார். எனவே உருவப்பற்றேர் இளஞ்சேட்சென்னி என்று அழைக்கப்பட்டார். இவர் மௌரியப் படையெடுப்பை முறியடிக்க தமிழரசுகளின் கூட்டமைப்பை உருவாக்கினார் எனத் தெரிகிறது.
கரிகாலச் சோழன் :
* கரிகாலன் பிறக்கும் முன்பே அவரது தந்தை இளஞ்சேட்சென்னி இறந்துவிட்டார். எனவே கரிகாலன் தாயின் வயிற்றில் இருக்கும் போதே அரசுரிமை எய்தினார். கரிகாலன் சிறுவனாக இருக்கும் போதே அவனைக் கொல்ல பகைவர்கள் சதி திட்டம் தீட்டினர். கரிகாலனும் அவனது தாயாரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கரிகாலன் சிறையில் இருந்து தப்பிச் செல்லும் போது அவனது கால் தீயில் கருகியது. எனவே அவனுக்கு கரிகாலன் என்ற பெயர் வந்தது. இது தவிர்த்து கரிகாலன் என்ற பெயருக்கு வேறு பல காரணங்களும் கூறப்படுகிறது. தனது தாய்மாமன் இரும்பிடர்த் தலையார் பாதுகாப்பில் வளர்ந்தார். அவரது உதவியோடு உறையூர் அரியணையை மீட்டார்.
* வெண்ணிப் பறந்தலைப் போர் கரிகாலன் களம் கண்ட முதல் போராகும். அப்போரில் பதினோரு அரசர்களின் கூட்டுப் படையை கரிகாலன் வீழ்த்தினார். இப்போரின் முடிவில் சேர அரசனும், பாண்டிய அரசனும் இறந்தனர். ஒன்பது குறுநில மன்னர்களும் புறமுதுகிட்டு ஓடினர்.
* ஒன்பது குறுநில மன்னர்களும் தோல்விக்கு பழிதீர்க்க மற்றொரு போருக்கு வந்தனர். அப்போது நடைபெற்ற வாகைப் பறந்தலைப் போரில் கரிகாலனே மீண்டும் வெற்றி பெற்றார்.
* தனது புகழ் மேலும் பரவ வேண்டுமென கரிகாலன் விரும்பினார். எனவே வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய மூன்று நாடுகளை வெற்றி கொண்டார். இமயமலையில் சோழர்களின் சின்னமான புலிக் கொடியை நட்டார்.
* இலங்கையின் மீதான படையெடுப்பிலும் வெற்றி பெற்றார். அங்கிருந்து பிடித்து வரப்பட்ட போர் கைதிகளை கொண்டு காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணை கட்டினார். இது உலகிலேயே மிகப் பழமையான கல்லணையாகத் திகழ்கிறது. காவிரி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் புகார் என்ற துறைமுக நகரத்தை உருக்கி அதை மாற்றுத் தலைநகரமாக அறிவித்தார். புகார் நகரம் பூம்புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் என்றும் அழைக்கப்பட்டது.
கரிகாலனின் வாரிசுகள் :
கரிகாலச் சோழனுக்கு மணக்கிள்ளி, பெருவிரற்கிள்ளி என்று இரு மகன்கள் இருந்தனர். கரிகாலனுக்குப் பிறகு உறையூரைத் தலைநகராகக் கொண்டு மணக்கிள்ளியும் புகாரைத் தலைநகராகக் கொண்டு பெருவிரற்கிள்ளியும் ஆட்சி புரிந்து வந்தனர்.
* பெருவிரற்கிள்ளிக்கு கிள்ளிவளவன், நலங்கிள்ளி, மாவளத்தான் என்று மூன்று மகன்கள் இருந்தனர். பெருவிரற்கிள்ளிக்குப் பிறகு அவரது மூத்த மகன் கிள்ளிவளவன் புகார் நகரில் அரியணை ஏறினான். போர்வீரம் மிகுந்து காணப்பட்ட நலங்கிள்ளி அவனது படைத் தளபதியாக செயல்பட்டான். அதேபோல் மணக்கிள்ளிக்கு நெடுங்கிள்ளி என்ற மகனும் நற்சோனை என்ற மகளும் இருந்தனர். நற்சோனையை இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கு மணம் முடித்துக் கொடுத்தார். மணக்கிள்ளிக்குப் பிறகு அவரது மகன் நெடுங்கிள்ளி உறையூர் நகரில் அரியணை ஏறினார். இரு பிரிவு சோழர்களுக்கு இடையே ஏற்பட்ட ஆதிக்கப் போரில் நெடுங்கிள்ளி கொல்லப்பட்டார்.
ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி :
* நெடுங்கிள்ளியின் மகன் பெருநற்கிள்ளி அரியணையை இழந்து தவித்து வந்தான். அதை அறிந்த சேரன் செங்குட்டுவன் தனது மைத்துனனுக்கு உதவ பெரும்படை ஒன்றை அனுப்பி வைத்தார். போரில் வெற்றி கண்ட சேரன் செங்குட்டுவன் பெருநற்கிள்ளிக்கு உறையூர் அரியணையை மீட்டுத் தந்தார். பின்னர் பல காலம் ஆட்சி புரிந்து வந்த பெருநற்கிள்ளி தனது வயது முதிர்ந்த காலத்தில் இராஜசூய யாகம் ஒன்றை நடத்தினார். எனவே அவர் ராஜசூயம்வேட்ட பெருநற்கிள்ளி என்ற அடைமொழியில் அழைக்கப்படுகிறார்.
முடிவு :
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் களப்பிரர்களுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக சோழர்கள் மாறினர்.