Home

02 August 2024

சிந்தனைக் களம் 2

உருவ கேலி கூடாது

ஒருவருடைய உருவத்தை வைத்து கேலி செய்யும் பழக்கம் பெரும்பாலான நபர்களிடம் உள்ளது. ஆனால் அப்படி செய்வது ஒரு தவறான செயலாகும். உருவத்தை வைத்து ஒருவரை மதிப்பிட முடியாது. அவருடைய குணத்தை வைத்துத் தான் மதிப்பிட வேண்டும். 


அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது. அப்படியாகினும் குறை இல்லாமல் பிறத்தல் அதனினும் அரிது. அதனால் அனைவருமே ஏதோ வகையில் ஏதோ ஒரு குறையுடன்தான் இருக்கிறார்கள். கண், காது, கால் ஆகியற்றில் திறன் குறைபாடுடன் இருப்பது மட்டுமே மனிதனுக்கு குறையல்ல. 


உயரமாகவோ அல்லது குள்ளமாகவோ இருப்பது, குண்டாகவோ அல்லது ஒல்லியாகவோ இருப்பது, வெள்ளையாகவோ அல்லது கருப்பாகவோ இருப்பது, பல் வெளியே நீண்டோ அல்லது பல்லே இல்லாமலோ இருப்பது, கண் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருப்பது, காது அகலமாகவோ அல்லது குறுகலாகவோ இருப்பது என இந்த பட்டியலில் இல்லாத நபர்களும் இல்லை; இதை நினைத்து கவலைப்படாத மனிதர்களும் இல்லை.  இவை அனைத்தும் ஏதோ ஒரு வகையில் குறை என்பதால்தான் அதை நினைத்து நாம் கவலைப்படுகிறோம். அதனால் அடுத்தவர் உருவத்தைப் பார்த்து கேலி செய்வதற்கு முன்னால் நம்மை பற்றியும் ஒருமுறை சிந்துத்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி சிந்தித்தால் நமக்கு கேலி செய்யும் எண்ணமே வராது. 


அதேபோல் வாய்பேச முடியாதவர்கள் எனச் சிலரைப் பார்த்து சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் வாய்பேச முடியாதவர்கள் அல்ல, காது கேளாதவர்கள். காது கேளாமல் இருப்பதால் நாம் சொல்லும் உச்சரிப்புகள் அவர்களுக்கு கேட்பதில்லை. அதனால் அதை திருப்பிச் சொல்லத் தெரியவில்லை. எனவே உலகில் வாய்பேச முடியாதவர்கள் என்று யாருமே இல்லை என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 



No comments:

Post a Comment