Home

27 July 2024

சிந்தனைக் களம் 1

கல் எறிதல் கூடாது

கல் எறிந்தால் எங்கு, எப்போது, யார் மேல் விழும் என்றே நம்மால் கணிக்க முடியாது. எதிர்பாராத விதமாக திடீரென ஒருவர் குறுக்கே வந்துவிட்டால் அவரது கதை முடிந்தது. அதனால்தான் கல் எறிதல் கூடாது என்று சொல்வார்கள். 


கிராமத்தில் ஒரு அம்மா தன் மகனுடன் வசித்து வந்தார். மகன் அவ்வூரில் உள்ள பள்ளியில் படித்து வருகிறான். அம்மா தினமும் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாலையில் வீட்டிற்கு ஓட்டிக்கொண்டு வருவது வழக்கம். 


ஒருநாள் மாலை மகன் பள்ளி விட்டதும் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டு இருந்தான். அம்மா மாடுகளை ஓட்டிக்கொண்டு வருகிறார். அப்போது மாடுகள் வழிமாறி செல்கிறது. அதைப் பார்த்த அம்மா மாடுகளை வீட்டின் பக்கமாக திருப்பிவிட, வழியில் இருந்த ஒரு கல்லை எடுத்து வீசுகிறார். ஆனால் அந்த கல் தரையில்பட்டு எகிறிச் சென்று அங்கு விளையாட்டிக் கொண்டிருந்த அவரது மகனின் ஒரு கண்ணில் அடித்துவிடுகிறது. மகன் வலியால் துடிக்கிறான். பதறிப்போனத் தாய் மகனை உடனடியாக மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுகிறார். மருத்துவரோ "கல்லடி பட்டதில் உங்கள் மகனுக்கு ஒரு கண்ணில் பார்வை போய்விட்டது. கண் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால்தான் மீண்டும் பார்வை கிடைக்கும். ஆனால், அதுவும் 20 வயதுக்குப் பிறகுதான் செய்ய முடியும்" எனச் சொல்லிவிட்டார். 


அதன்பிறகு நாட்கள் உருண்டோடின. ஒவ்வொரு நாளும் தன் மகனை பார்க்கும் போதெல்லாம் அந்தத் தாய் குற்ற உணர்ச்சிக்கு ஆளானார். என் மகனின் பார்வை பறிபோக நானே காரணமாகிவிட்டேனே எனக் கூனிக்குருகினாள். மகனுக்கு 20 வயது வந்தவுடன் மருத்துவரைப் பார்த்து ஆலோசனைக் கேட்டார். மருத்துவ பரிசோதனைகளை முடித்த மருத்துவர் சில நாட்களுக்கு பிறகு அறுவை சிகிச்சை செய்கிறார். மகனுக்கு கண் பார்வை வந்தது. ஆனால் அப்போது தாய்க்கு ஒரு கண்ணில் பார்வை இல்லாமல் இருந்தது. அதற்கு காரணம், தாயுள்ளம் அல்லவா அதனால் தனது கண்ணையே தன் மகனுக்கு தானமாகக் கொடுத்துவிட்டார். 


ஒன்றின் மேல், ஒரு நேரம், ஒரு இடம் என நாம் மூன்று நிகழ்வுகளில் கல் எறிதல் கூடாது. அஃது, ஒன்றின் மேல் என்றால் குளவிக்கூடு அல்லது தேன்கூடு மீது கல் எறிதல் கூடாது. குளவியானது வேகமாகப் பறக்கும் ஆற்றல் கொண்டது. மனிதர்கள் எவ்வளவு வேகமாக ஓடினாலும் அதனிடம் இருந்து தப்பிக்க முடியாது. அடுத்து, ஒரு நேரத்தில் என்றால் இரவு நேரத்தில் கல் எறிதல் கூடாது. இரவில் ஆள் இருக்கிறார்களா இல்லையா என்று நமது கண்ணுக்குத் தெரியாது. எனினும் அது நேராகச் சென்று ஆள் மீதுதான் அடிக்கும். அடுத்து, ஒரு இடத்தில் என்றால் பள்ளிக் கூடத்தில் கல் எறிதல் கூடாது. நாம் விளையாட்டாக ஒரு சிறிய கல்லைத் தூக்கிப் போட்டு இருப்போம். அங்கு விளையாடிக் கொண்டு இருக்கும் ஒரு மாணவன் அப்போதுதான் திடீரென குறுக்கே ஓடிவருவான். அக்கல் அவன் மீது விழுந்தால் உடனே இரத்த காயம் ஏற்படும். 


கல் எறிதல் கூடாது, அது ஒரு தவறான செயல் என்பது அனைவருக்கும் புரிந்திருக்கும் என நம்புகிறேன் மீண்டும் ஒரு சிந்தனை களம் பதிவில் சந்திப்போம். நன்றி. 


இங்ஙனம். 
அ. அறிவழகன், M.A., M.Phil., M.Ed.,
முதுகலை வரலாறு ஆசிரியர், 
இராணிப்பேட்டை மாவட்டம். 



4 comments:

  1. அருமை தலைவரே....

    ReplyDelete
  2. அற்புதமான அவசியமான படைப்பு. இனிது.

    ReplyDelete
  3. அற்புதமான அவசியமான படைப்பு. இனிது.

    ReplyDelete
  4. நல்ல கருத்து தலைவரே

    ReplyDelete