ஐந்திணைகள் :
தமிழர்கள் தங்கள் வாழ்வியலை அகம், புறம் என இரண்டாகப் பிரித்திருந்தனர். அதே போல் நிலத்தை ஐந்து திணைகளாகப் பிரித்திருந்தனர். அவையாவன: குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை. நிலம் அகத்தின் கீழ் வருவதால் அதை அன்பின் ஐந்திணை என்று அழைத்தனர்.
அகம் என்பது முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இவை ஐந்திணைகளுக்கும் தனித்தனியே ஒதுக்கப்பட்டு இருந்தன. முதற்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகியவற்றைக் கூறுகிறது. கருப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய மக்கள், தொழில், கடவுள், உணவு, விலங்கு, பறவை, மரம், மலர், பண், யாழ் ஆகியவற்றைக் கூறுகிறது. உரிப்பொருள் என்பது ஐந்திணைக்கு உரிய ஒழுக்கத்தைக் கூறுகிறது.
பெரும்பொழுது ஒரு வருடத்தை ஆறு காலங்களாகவும் சிறுபொழுது ஒரு நாளினை ஆறு கூறுகளாகவும் பிரிக்கிறது. இளவேனில், முதுவேனில், கார்காலம், குளிர்காலம், முன்பனிக் காலம், பின்பனிக் காலம் ஆகிய ஆறும் பெரும்பொழுதுகள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் ஆகிய ஆறும் சிறுபொழுதுகள்.
1. குறிஞ்சித் திணை :
குறிஞ்சி நிலம் என்பது மலையும் மலை சார்ந்த இடமாகும். குறிஞ்சி நில மக்கள் சேயோன் அல்லது முருகனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர், குறத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேட்டையாடுதல் இருந்தது. இவர்கள் மலை நெல், தினை ஆகிய உணவுகளை உண்டனர். குறிஞ்சி நில ஊர்கள் சிறுகுடி என்று அழைக்கப்பட்டன.
2. முல்லைத் திணை :
முல்லை நிலம் என்பது காடும் காடு சார்ந்த இடமாகும். முல்லை நில மக்கள் மாயோன் அல்லது திருமாலை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் ஆயர், ஆய்ச்சியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மேய்த்தல் தொழில் இருந்தது. இவர்கள் சாமை, வரகு ஆகிய உணவுகளை உண்டனர். முல்லை நில ஊர்கள் பாடி, சேரி என்று அழைக்கப்பட்டன.
3. மருதத் திணை :
மருத நிலம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமாகும். மருத நில மக்கள் இந்திரனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் உழவர், உழத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வேளாண்மை செய்தல் இருந்தது. செந்நெல், வெண்ணெல் ஆகிய உணவுகளை உண்டனர். மருத நில ஊர்கள் பேரூர், மூதூர் என்று அழைக்கப்பட்டன.
4. நெய்தல் திணை :
நெய்தல் நிலம் என்பது கடலும் கடல் சார்ந்த இடமாகும். நெய்தல் நில மக்கள் வருணனை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் பரதர், பரத்தியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக மீன் பிடித்தல் இருந்தது. நெய்தல் நில ஊர்கள் பட்டினம், பாக்கம் என்று அழைக்கப்பட்டன.
5. பாலைத் திணை :
பாலை நிலம் என்பது மணலும் மணல் சார்ந்த இடமாகும். பாலை நில மக்கள் கொற்றவை அல்லது காளியை கடவுளாக வழிபட்டனர். இங்கு வாழ்ந்த மக்கள் எயினர், எய்ற்றியர் என அழைக்கப்பட்டனர். முக்கியத் தொழிலாக வழிப்பறிக் தொழில் இருந்தது. இவர்கள் கொள்ளை அடிப்பதில் கிடைத்த உணவுகளை உண்டனர். பாலை நில ஊர்கள் குறும்பு என்று அழைக்கப்பட்டன.
No comments:
Post a Comment