வ.உ.சி என்று சுருக்கமாக அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் தமிழகத்தில் தோன்றிய சுதந்திர போராட்ட வீரர்களில் மிகவும் தனித்துவம் வாய்ந்த தலைவர். சுதேசி இயக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதோடு 1906 ஆம் ஆண்டு சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியை நிறுவினார். சுதேசி இயக்கத்தின் செயல் வடிவமாக எழுச்சி பெற்ற வ.உ.சி. நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்ந்தார். ஆங்கிலேயர்களின் கடலாதிக்க முற்றுரிமைக்கு சவால்விடும் வகையில் முதன் முதலாக கப்பலோட்டினார். அதன் காரணமாக கப்பலோட்டிய தமிழன் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.
‘திரை கடலோடி திரவியம் தேடு’ என்பதற்கு எடுத்துக்காட்டாக, கப்பலோட்டும் கலை தமிழர்களுக்கே உரிய ஒர் பாரம்பரியம் ஆகும். ஆங்கிலேயர்கள் இந்தியர்களுடைய செல்வத்தைச் சுரண்டுவது கண்டு நெஞ்சு பொறுக்காத சிதம்பரம் பிள்ளை அவர்களை எதிர்த்துக் கப்பலோட்டினார். வெள்ளையரை எப்போது விரட்டியடிக்கலாம் என்று சமயத்தை எதிர்பார்த்திருந்தார் வ.உ.சி. இந்நிலையில், வங்கப் பிரிவினைப் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியது. மக்கள் அந்நியத் துணிகளை புறக்கணிப்பு செய்தார்கள்.
சிதம்பரனார் இதை சரியான நேரமாகக் கண்டார். வழக்குரைஞர் தொழிலைத் தூக்கி எறிந்தார். தேச விடுதலைப் போரில் குதித்தார். அதன் அறிகுறியாக தன்னிடம் இருந்த அன்னிய துணிமணிகள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தி எரித்தார். இனி பிற நாட்டான் பொருள் எதையும் வாங்குவதில்லை என்று சபதமெடுத்தார். அந்நியத் துணி எவன் அணிந்திருந்தாலும், அவனை விரோதியாகவே பாவிக்கும் எண்ணம் அவருக்கு உதித்தது.
சுதேசி இயக்கத்தின் ஒரு பகுதியாக 1906 அக்டோபர் 16 ஆம் தேதியன்று சிதம்பரனாரின் சுதேசிக் கப்பல் கம்பெனி பதிவு செய்யப்பட்டது. கப்பல் கம்பெனியின் தலைவர் பொறுப்பை மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், சேதுபதி சமஸ்தானத்தைச் சேர்ந்தவருமான பாண்டித்துரைத் தேவர் ஏற்றார். சிதம்பரனார் அந்த நிறுவனத்தின் செயலாளர் ஆனார்.
கப்பல் நிறுவனத்திற்கு நிதி திரட்ட அதன் பங்குகளை விற்பது என முடிவெடுக்கப்பட்டது. ஒரு பங்கின் விலை 25 ரூபாய் என்றும், நாற்பதாயிரம் பங்குகளை விற்று பத்து லட்சம் ரூபாய் சேர்ப்பது என்றும் முடிவெடுத்துப் பணியாற்றியது. பங்குதாரர்கள் மளமளவென்று சேர்ந்தார்கள். ஜனாப் ஹாஜி முகமது பக்கீர் சேட் என்பவர் இரண்டு லட்சம் ரூபாய்க்குரிய பங்குகளை வாங்கினார்.
சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கென்று சொந்தக் கப்பல் ஏதுமில்லை. வாங்கவும் இயலவில்லை. அதனால் ஷாலைன் ஸ்டீமர்ஸ் என்ற கம்பெனியிடமிருந்து கப்பல்களைச் சுதேசிக் கம்பெனியார் குத்தகைக்கு வாங்கி ஒட்டினார்கள். ஷாலைன் ஸ்டீமர்ஸ் கம்பெனியின் உரிமையாளர் எஸ்ஸாஜி பாஜ்பாய் என்பவர். அவரைப் பிரிட்டிஷ் நிறுவனம் மிரட்டியதால் சுதேசிக் கம்பெனிக்கு குத்தகைக்காகக் கொடுக்கப்பட்டிருந்த கப்பல்களை ஷாலைன் நிறுவனத்தார் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார்கள். சிதம்பரனார் உள்ளம் கலங்கவில்லை. உடனே அவர் இலங்கைத் தலைநகரான கொழும்பு நகருக்குச் சென்றார். அங்கே உள்ள கப்பல் கம்பெனி ஒன்றில், கப்பலைக் குத்தகைக்குப் பேசி தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்தார்.
சொந்தமாகக் கப்பல் இல்லாமல் வெள்ளையர்கள் கப்பல் நிறுவனத்தை எதிர்த்து வாணிகம் நடத்திட முடியாது என்பதைச் சிதம்பரனார் உணர்ந்தார். அதனால், புதிய கப்பல்களை வாங்கிட அவர் பணம் திரட்டினார். துத்துக்குடி வணிகர்கள் முடிந்த அளவுக்கு சுதேசிக்கப்பல் கம்பெனிக்குப் பண உதவிதளைச் செய்தார்கள். ஆனால், அந்த நிதியுதவி கப்பல் வாங்கப் போதுமானதாக இருக்கவில்லை.
பம்பாய், கல்கத்தா போன்ற மிகப் பெரிய நகரங்களுக்குச் சென்று எப்படியெல்லாம் யார் யாரைப் பிடித்துப் பணம் திரட்ட முடியுமோ அப்படியெல்லாம் சிதம்பரனார் பணம் சேகரித்தார். சுதேசிக் கப்பல் கம்பெனிக்கு பல வட நாட்டு வணிகர்கள் பங்குதாரர்கள் ஆனார்கள்.
சிதம்பரம் பிள்ளை சுதேசிக் கம்பெனிக்குப் பணம் திரட்டிடச் சென்ற போது, “மீண்டும் தமிழகம் திரும்பினால் கப்பலுடன் தான் வருவேன். இல்லையென்றால் அங்கேயே கடலில் விழுந்து உயிர் விடுவேன்” என்று சபதம் செய்து விட்டு வடநாடு புறப்பட்டுச் சென்றார்.
வ.உ.சி. பம்பாய் சென்றபோது, அவரது ஒரே மகன் உலகநாதன் நோய்வாய்பட்டு இருந்தான். மனைவி மினாட்சி கர்ப்பிணியாக இருந்தார். சிதம்பரனார் நண்பர்கள் அவரை இப்போது போக வேண்டாம் என்று தடுத்தார்கள். ஆனால் அவர் எனது மகனையும் - மனைவியையும் இறைவன் காப்பாற்றுவான் என்று கூறிவிட்டு பம்பாய் சென்றார். குடும்ப நலத்தை விட தேச சேவைதான் பெரியது என்ற எண்ணத்தோடு அவர் பம்பாய் போனார்.
எடுத்த காரியத்தில் மிகக் கண்ணும் கருத்துமாக இருந்து அரும்பாடு பட்டு சில மாதங்களுக்குப் பின்னர் அவர் ஒரு கப்பலுடன் துத்துக்குடி துறைமுகத்துக்குத் திரும்பி வந்தார். கப்பலின் பெயர் ‘காலிபா’ என்பதாகும். கப்பலுடன் திரும்பி வந்த சிதம்பரனாரின் சாதனைத் திறனைக் கண்டு மக்களும், தமிழ் வணிகர்களும் பெரிதும் மகிழ்ந்தார்கள்.
அதே நேரத்தில் வேத மூர்த்தி என்ற அவரது நண்பர் பிரான்சு நாட்டுக்குச் சென்று ‘லாவோ’ என்றொரு கப்பலை வாங்கி வந்தார். அத்துடன் இரண்டு இயந்திரப் படகுகளும் சேர்த்து வாங்கப்பட்டன.
பிரிட்டிஷ் கம்பெனி கப்பல்களில் இலங்கை போகும் பயணிகளும் ஏறவில்லை. கட்டுப்பாடாக எல்லாரும் தமிழர்களின் சுதேசிக் கப்பலிலேயே பயணம் செய்தார்கள். வெள்ளைக்காரர்களுடைய கப்பல் கம்பெனி நிர்வாகத்தினர் தங்களது கப்பல்களுக்குரிய பயணக் கட்டணங்களையும் குறைத்துக் கொண்டு, தரகர்களை நியமித்து பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள்.
மக்கள் ஆதரவு இல்லாததைக் கண்ட ஆங்கிலேய கப்பல் நிர்வாகம் தனது கட்டணத்தைக் குறைத்தது. அதற்குப் பிறகும் கூட யாரும் கப்பல் பயணம் செய்ய முன் வரவில்லை. ‘கட்டணமே இல்லாமல் இலவசப் பிரயாணம் செய்ய வாருங்கள்’ என்று பயணிகளை அழைத்துப் பார்த்தார்கள். அப்போதும் கூட மக்கள் யாரும் முன்வரவில்லை.
இந்த நேரத்தில், பிரிட்டிஷ் கப்பல் மீது வேண்டுமென்றே சுதேசிக் கப்பல் மோதியதாக, துறைமுக அதிகாரிகளிடம் ஆங்கிலேய நிர்வாகத்தினர் புகார் செய்தார்கள். இந்தப் புகாருக்குப் பிறகு வெள்ளையர் நிர்வாகக் கப்பல் புறப்பட்ட பின்புதான் சுதேசிக் கப்பல் துறைமுகத்தை விட்டுப் புறப்பட வேண்டும் என்று சப் மாஜிஸ்திரேட் வாலர் உத்தரவிட்டார்.
இந்த சூது நிறைந்த உத்தரவை எதிர்த்து சுதேசிக் கம்பெனியார் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் மேல் முறையீடு வழக்கு தொடுத்தார்கள். அதே நேரத்தில், ‘சுதேசிக் கப்பல் - பிரிட்டிஷார் கப்பல் மீது மோதவில்லை, அது பொய் புகார்’ என்பதையும் சுதேசி நிறுவனம் நிரூபித்துக் காட்டியது. இந்த உண்மைகளை உணர்ந்த மாவட்ட மாஜிஸ்திரேட், ‘சுதேசிக் கப்பல் எந்த நேரத்திலும் புறப்படலாம், அந்த உரிமை அதற்கு உண்டு’ என்று தீர்ப்பளித்தார்.
இந்த தீர்ப்பு பிரிட்டிஷ் கப்பல் நிறுவனத்துக்கு இடி விழுந்தாற்போன்ற அபாய நிலையை உருவாக்கி விட்டது. சுதேசிக் கப்பல் நிறுவனத்துக்கும், பிரயாணிகளுக்கும் உண்மையான நீதி கிடைத்தது என்ற மகிழ்ச்சி ஏற்பட்டது.
வ.உ. சிதம்பரனாரின் 150 வது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்ததுடன் முதலமைச்சர் வெளியிடப்பட்ட 14 புதிய அறிவிப்புகள் :
முன்னதாக மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் சுதந்திர தின உரையிலேயே வ.உ.சி.யின் 150-வது பிறந்த நாள் விழா அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என்று அறிவித்திருந்தார். அதனை செயல்படுத்தும் வகையில் 05-09-2021 அன்று கொண்டாடப்படும் வ.உ.சி.யின் 150-வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது தியாகத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 14 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
✍️ சென்னை காந்தி மண்டபத்தில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிறையில் இழுத்த செக்கு வைக்கப்பட்டிருக்கக்கூடிய மண்டபம் பொலிவூட்டப்பட்டு, அங்கு அன்னாரது மார்பளவு சிலை திறந்து வைக்கப்படும்.
✍️ தூத்துக்குடி மாநகரில், முதன்மைச் சாலையான மேல பெரிய காட்டன் சாலை, இனி ‘வ.உ.சிதம்பரனார் சாலை’ என அழைக்கப்படும்.
✍️ தனது வாழ்நாளின் முக்கிய நாட்களை கோவை சிறையிலே கழித்த வ.உ.சிதம்பரனாரின் முழு உருவச் சிலையானது, கோயம்புத்தூர் வ.உ.சிதம்பரனார் பூங்காவில் அமைக்கப்படும்.
✍️ செய்தித் துறையின் பராமரிப்பிலுள்ள ஒட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார் வாழ்ந்த நினைவு இல்லமும், திருநெல்வேலியில் உள்ள வ.உ.சிதம்பரனார் மணிமண்டபமும் புனரமைக்கப்பட்டு, அவ்விடங்களில் அன்னாரின் வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறிந்து பயனடையும் வகையில், ஒலி ஒளி காட்சி அமைக்கப்படும்.
✍️ வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படத்தினை இன்றைய இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் வகையில், நவீன டிஜிட்டல் முறையிலே அது வெளியிடப்படும்.
✍️ திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் வ.உ.சிதம்பரனார் பெயரில் புதிய ஆய்விருக்கை ஒன்று அமைக்கப்படும்.
✍️ வ.உ. சிதம்பரனார் எழுதியுள்ள அனைத்து புத்தகங்களும் புதுப்பொலிவுடன் புதுப்பிக்கப்பட்டு, தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் மூலம் குறைந்த விலையில் மக்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
✍️ திருநெல்வேலியில் வ.உ. சிதம்பரனார் மற்றும் மகாகவி பாரதியார் படித்த பள்ளிக்குத் தேவையான கூடுதல் வகுப்பறைகள், கலை அரங்கம் மற்றும் நினைவு நுழைவு வாயில் ரூ1.05 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
✍️ கப்பல் கட்டுமானம், தொழில்நுட்பம், போக்குவரத்து ஆகிய கப்பல் தொடர்பானத் துறைகளில் ஈடுபட்டு, சிறந்த பங்காற்றி வரும் தமிழர் ஒருவருக்கு ‘கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. விருது’ ஆண்டுதோறும் வழங்கப்படும். விருதுத் தொகையாக ரூ.5 லட்சம் மற்றும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
✍️ கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் மறைந்த நவம்பர் 18 -ம் தேதி, தியாகத் திருநாளாக அறிவித்துக் கொண்டாடப்படும்.
✍️ இந்த ஆண்டு, செப்டம்பர் 5, 2021 முதல் செப்டம்பர் 5, 2022 வரை, தூத்துக்குடியிலும், திருநெல்வேலியிலும் உருவாகும் அரசு கட்டிடங்களுக்கு கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் பெயர் சூட்டப்படும்.
✍️ பள்ளி, கல்லூரி மாணவர்கள் அறிந்து பயனடையும் வகையில், போக்குவரத்துத் துறையின் சார்பில் பேருந்து ஒன்றில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து புகைப்படக் கண்காட்சி ஏற்பாடு செய்து பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் அனுப்பப்படும்.
✍️ தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வாயிலாக வ.உ. சிதம்பரனார் குறித்த இணைய வழி கருத்தரங்கம் நடைபெறும்.
✍️ தமிழ் நிகர்நிலைக் கல்விக் கழகத்தின் வாயிலாக கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் எழுதிய நூல்கள் மற்றும் கையெழுத்துப் பிரதிகள் ஆகியவை முழுவதும் இணையத்திலே மின்மயப்படுத்தி வெளியிடப்படும்.
No comments:
Post a Comment