அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் விவரங்களை பள்ளிக்கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில், அனைத்துமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம் :
நடப்பு கல்வியாண்டு (2021-22) பணியாளர் நிர்ணயம் சார்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கல்வி மேலாண்மை தகவல் முகமை (எமிஸ்) வலைதளத்தில் மாணவர்களின் சேர்க்கை மற்றும் பணிபுரியும் ஆசிரியர்களின் விவரம் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து தற்போது எமிஸ் வலைத்தளத்தில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் தொடர்பான விவரங்களை பதிவேற்றம் செய்ய சிறப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
எனவே, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் தங்கள் பகுதியில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை ஒப்பிட்டு எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அவ்வாறு பதிவேற்றும்போது கடந்த ஆண்டுகளில் சரண் செய்யப்பட்டிருந்த பணியிடங்களை கணக்கில் கொள்ளக்கூடாது. இந்த பணிகளை உரிய வழிமுறைகளின்படி துரிதமாக முடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment