Home

04 March 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - அவந்தி, பிரத்யோதா

அவந்தி
மத்தியப்பிரதேச மாநிலத்தில் மாளவத்தைச் (உஜ்ஜயினி மாவட்டம்) சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியதாக அவந்தி இருந்தது. வெட்ராவதி (பேட்வா) ஆறு அவந்தி நாட்டை இரண்டாகப் பிரிந்தது. இதன் முதன்மைத் தலைநகரம் உஜ்ஜயினி.வடக்குப் பகுதியின் தலைநகரமாகவும் இருந்தது. இது ஷிப்ரா ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கங்கைச் சமவெளியிலிருந்து மேற்கு கடற்கரையிலுள்ள புரோச் செல்லும் வழியில் அமைந்திருந்த உஜ்ஜயினி ஒரு சிறந்த வணிக நகரமாக காணப்பட்டது. அவந்தியின் செல்வ செழிப்புக்கு இது ஒரு முக்கிய காரணமாகத் திகழ்ந்தது. தெற்குப் பகுதியின் தலைநகரம் மஹிஷ்மதி (தற்போது மஹேஸ்வர்). இது நர்மதை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. அவந்தி, வத்சம், மகதம் இடையே ஆதிக்கப் போர்கள் நடைபெற்று வந்தன. ஆனால், அஸ்மகம் மற்றும் வஜ்ஜி அரசுகள் அவந்தியோடு நெருக்கமான நட்புறவு கொண்டிருந்தன. அவந்தி பௌத்த மத மையமாக திகழ்ந்தது. அப்பகுதி மக்கள் பேசிய மொழி பாலி மொழியை ஒத்திருந்தது. 


பிரத்யோதா : 
அவந்தியை யது குலத்தைச் சேர்ந்த ஹைஹேயர்கள் ஆட்சி செய்து வந்தனர். பிரத்யோதாவின் தந்தை புனிகா அல்லது புலிகா ஆவார். அவர் உஜ்ஜயினியைச் சுற்றி இருந்த வடக்கு அவந்தியின் அரசவையில் அமைச்சராக இருந்தார். அவர் அரசரைக் கொன்றுவிட்டு தனது மகன் பிரத்யோதாவை அரசராக்கினார். புத்தரது காலத்தில் அவந்தியின் அரசராக பிரத்யோதா (பஜ்ஜோதா) இருந்தார். அவர் "சண்ட பஜ்ஜோதா" (கொடூரமான பிரத்யோதா), "மகாசேனா" (பெரிய படையை வைத்திருப்பவர்) என்று அழைக்கப்பட்டார். அவர் வஜ்ஜி கூட்டரசின் தலைவர் சேதகன் மகளான லிச்சாவி இளவரசி ஷிவா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பாலகர், கோபாலர் என இரண்டு மகன்களும் வாசவதம் என்ற மகளும் பிறந்தனர். ஆரம்பத்தில் வத்சம், அவந்தி இடையே பல போர்கள் நடைபெற்றன. வத்ச நாட்டு அரசன் உதயணன் பிரத்யோதாவின் மகள் வாசவதத்தை மணம் முடித்தார். அதன் விளைவாக இவ்விரு நாடுகளுக்கிடையே சிறிதுகாலம் அமைதி நிலவியது. பிரத்யோதா, மதுராவைச் சேர்ந்த சூரசேனா அரசுடனும் திருமண உறவு கொண்டிருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த சூரசேனா அரசன் சுபாஹு "அவந்திபுத்திரன்" என்று அழைக்கப்பட்டார். 


கிழக்கு இந்தியாவில் புதிதாக எழுச்சி பெற்றுவரும் அரசாக மகதம் இருந்தது. பிரத்யோதா மகத அரசன் பிம்பிசாரரை ஒடுக்க நினைத்தார். ஆனால் பிம்பிசாரர், சேதகன் மகளான லிச்சாவி இளவரசி செல்லண்ணா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். எனவே இருவருக்கும் இடையே சுமூகமான உறவு நிலவியது. ஒருசமயம் பிரத்யோதா கடுமையான நோயால் பாதிக்கப்பட்டார். பிம்பிசாரர் தனது புகழ்பெற்ற அரசவை மருத்துவரான ஜீவகரை அனுப்பி அவரது நோயைக் குணப்படுத்தினார். பிம்பிசாரர் காலத்திலேயே பிரத்யோதா மகதத்தின் மீது தாக்குதல் நடத்தினார். அதை இளவரசர் அஜாதசத்ரு முறியடித்தார். அஜாதசத்ரு அரசரான பிறகு பிரத்யோதாவின் தாக்குதலுக்குப் பயந்து, இராஜகிருகத்தைச் சுற்றிலும் பல கோட்டைகளை எழுப்பினான். 


அவந்தி நாட்டின் கிழக்கு எல்லையில் இரும்புத்தாதுகள் கிடைத்தன. அதனால் அவர்களிடத்தில் இரும்பாலான வலிமையான போர்க் கருவிகள் அதிகம் இருந்தன. எனவே மகதம் அவந்தியை கைப்பற்றுவது நூறு ஆண்டுகளுக்குத் தாமதமானது. பிரத்யோதா மறைவிற்குப் பிறகு அவரது மகன் பாலகா அவந்தியின் அரசரானார். பாலகா வத்சம் நாட்டை கைப்பற்றி அதை அவந்தியோடு இணைத்துக் கொண்டார். மக்கள் பாலகாவை அரசப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு கோபாலர் மகன் அஜ்ஜகாவை அரசராக அறிவித்தனர். எனினும் அவர் அரசப் பதவியை ஏற்கவில்லை. பாலகாவைத் தொடர்ந்து விசாகயுபா, அஜ்ஜகா, அவந்திவர்தனா ஆகியோர் அவந்தியை ஆண்டனர். இவர்கள் வலிமைகுன்றி காணப்பட்டதால் அவந்தியை மகதம் இணைத்துக் கொண்டது. இந்தப் பகுதியில் பின்னாளில் உதயமான மாளவம் நெடுங்காலமாக வட இந்திய அரசியலில் இடம்பெற்று வந்தது. 


Prepared By
A. ARIVAZHAGAN, M.A., M.Phil., M.Ed., 
PG Teacher, Ranipet District
Cell - 9944573722


No comments:

Post a Comment