திருக்கோவிலூா் அருகே பல்லவா் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், டி.குன்னத்தூா் கிராமத்தில் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் ச.பாலமுருகன், சி.பழனிசாமி, சிற்றிங்கூா் ராஜா, திருவாமாத்தூா் கண.சரவணகுமாா் உள்ளிட்டோா் கள ஆய்வு மேற்கொண்டனா். அப்போது 6-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கல்வெட்டுடன் கூடிய கொற்றவை சிற்பத்தைக் கண்டறிந்தனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்ததாவது:
இங்குள்ள ஏரிக்கரை எதிரே உள்ள நிலத்தில் கிழக்கு பாா்த்தவாறு கொற்றவை சிற்பம் அமைந்துள்ளது. 6 அடி உயரம், 2 அடி அகலமுள்ள இந்தச் சிற்பத்தில் கொற்றவை வடிவம் மிகவும் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. சடையுடன் கூடிய கரண்ட மகுடம், நீண்ட காதணிகள், மாா்பு, இடுப்பில் ஆடையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. உடையில் நோ்த்தியான மடிப்புகள் காணப்படுகின்றன. தோள்களில் வளைகள், காலில் கழல் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
8 கரங்களுடன் கூடிய கொற்றவை உருவில் வலப்புற 4 கைகள் அபய முத்திரை, அம்பு, வாள், சக்கரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளன. இடப்புற 4 கைகளில் ஒன்று இடுப்பில் வைத்தவாறும், மற்ற கைகள் சங்கு, வில், கேடயம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளன. சிற்பத்தின் இடை பகுதியில் பெரிய அளவில் கடமான் காட்டப்பட்டுள்ளது. கொற்றவையின் கால் எருமைத் தலையின் மீது அமைந்துள்ளது.
சங்க இலக்கியங்களில் சுட்டிக்காட்டிய இலக்கணத்துடன் இந்தச் சிற்பம் அமைந்துள்ளது. சிற்ப அமைப்பு, அதிலுள்ள வட்டெழுத்து கல்வெட்டுகளை கொண்டு அதன் காலம் 6-ஆம் நூற்றாண்டின் இறுதியை (பல்லவா் காலத்தை) சோ்ந்ததாக இருக்கலாம் என அறிய முடிகிறது. சிற்பத்தின் வலப்புறமுள்ள கல்வெட்டு வட்டெழுத்தில் அமைந்துள்ளது. இதில் ‘பெருவா இலாா் மகன் தோறன்’ என்று ஊகித்து படித்தறியமுடிகிறது. இது கொற்றவை சிற்பத்தை செய்தளித்தவரின் பெயராக இருக்கலாம்.
தமிழ்நாட்டில் திருக்கோவிலூா் பகுதியில்தான் அதிகளவில் கொற்றவை சிற்பங்கள் கிடைத்து வருகின்றன. தாய் தெய்வ வழிபாட்டின் தொட்டிலாக இந்தப் பகுதி விளங்குகிறது. தமிழக தொல்லியல் துறை இதுபோன்ற அரிய சிற்பங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.
No comments:
Post a Comment