சேரர்கள் :
சேரர்கள் வஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களின் சின்னம் வில் அம்பு. அசோகரின் இரண்டாம் பாறைக் கல்வெட்டு சேர அரசர்களை கேரளப் புத்திரர்கள் என்றே குறிப்பிடுகிறது. அதேபோல் சங்க இலக்கியங்களும் சேர நாட்டின் பெரும் பகுதி கேரளாவில் இருப்பதாகவே கூறுகிறது. ஆனால் புகளூர் கல்வெட்டு கரூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த மூன்று தலைமுறை சேர அரசர்களின் பெயர்களை கூறுகிறது. எனவே வஞ்சி என்பது கேரளாவில் உள்ள திருவஞ்சிக்களம் என்று ஒரு பிரிவினர் கூறுகின்றனர். ஆனால் மற்றொரு பிரிவினர் வஞ்சி என்பது தமிழ்நாட்டில் உள்ள கரூர் நகரமே என்று கூறுகின்றனர்.
சங்க காலத்தில் ஆட்சி புரிந்த பத்து சேர அரசர்களைப் பற்றி பதிற்றுப்பத்து கூறுகிறது. அவர்களில் உதியன் சேரலாதன், இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், சேரன் செங்குட்டுவன் ஆகியோர் நன்கு அறியப்படும் அரசர்கள் ஆவர்.
உதியன் சேரலாதன் :
சேரலாதன் மரபை தோற்றுவித்தவர் உதியன் சேரலாதன் ஆவார். மகாபாரதப் போரில் ஈடுபட்ட இருதரப்பு போர் வீரர்களுக்கும் உணவு வழங்கினார் என்று சங்க பாடல் வழியாக அறிய முடிகிறது. எனவே பெருஞ்சோற்று சேரலாதன் என்ற விருதுப் பெயரைப் பெற்றார்.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் :
உதியன் சேரலாதனின் மகனாக கருதப்படும் நெடுஞ்சேரலாதன் கடம்பர்களுடனான போரில் வெற்றி பெற்றார். கடம்பர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி அதில் வீரமுரசு செய்தார் என அகநானூறு கூறுகிறது. வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். இமயமலையில் சேரர்களின் சின்னமான வில் அம்பு கொடியை நட்டார் என பதிற்றுப்பத்து கூறுகிறது. எனவே "இமயவரம்பன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார். ஆனால் வடஇந்திய படையெடுப்பு நடந்ததற்கு உறுதியான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே பல வரலாற்று ஆசிரியர்கள் இதை ஏற்க மறுக்கின்றனர்.
சேரன் செங்குட்டுவன் :
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் மூத்த மகன் சேரன் செங்குட்டுவன். தந்தையை மிஞ்சிய தனயனாக செங்குட்டுவன் விளங்கினார். சிலப்பதிகாரம் இயற்றிய இளங்கோவடிகள் இவரது சகோதரர் ஆவார். இமயவரம்பனுக்கு பிறகு அவரது இளைய மகனான இளங்கோவடிகளே அரியணை ஏறுவார் என ஜோதிடர் கூறினார். அதனால் இமயவரம்பன் மிகவும் வருத்தமடைந்தார். அதை அறிந்த இளங்கோவடிகள் துறவறம் பூண்டார்.
* வணிகர்களுக்கு இடையூறு செய்து வந்த கடல் கொள்ளையர்களான கடம்பர்களை வீழ்த்தினார். எனவே "கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்" என்ற விருதுப் பெயரைப் பெற்றார்.
* சோழப் பேரரசில் ஏற்பட்ட வாரிசுரிமைப் போரில் கிள்ளி வளவனுக்கு ஆதரவாகப் நின்றார். நேரிவாயில் போரில் ஒன்பது குறுநில அரசர்களை வீழ்த்தி கிள்ளி வளவனுக்கு சோழ அரியணையைப் பெற்றுத் தந்தார்.
* செங்குட்டுவனின் நண்பன் அறுகையை மோகூரை ஆண்ட பழையன் சிறை பிடித்தான். மோகூர் போரில் பழையனைத் தோற்கடித்து தனது நண்பன் அறுகையை விடுவித்தார்.
* கண்ணகிக்கு சிலை வடிக்க இமயமலையில் இருந்து கல் கொண்டுவரச் சென்றார். தன் தந்தையைப் போலவே இமயமலையில் வில்லம்பு கொடியை நட்டார். வட இந்தியாவில் தன்னை எதிர்த்துப் போரிட்ட கனக விசயர் என்ற மன்னரைத் தோற்கடித்தார். பின்னர் அவன் தலை மீது ஒரு கல்லை வைத்து அதை தமிழகம் கொண்டுவரச் செய்தார். அக்கல்லில் கண்ணகிக்கு சிலை வடித்து விழா எடுத்தார். அதில் இலங்கை மன்னன் கயவாகு கலந்து கொண்டார் என சிலப்பதிகாரம் கூறுகிறது.
முடிவு :
கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் தமிழ்நாடு முழுவதும் களப்பிரர்களின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் விளைவாக மூவேந்தர்களின் ஆட்சி வீழ்ச்சி அடையத் தொடங்கியது. இறுதியில் சேரர்கள் முழுவதுமாக மறைந்துப் போயினர்.
No comments:
Post a Comment