Home

25 February 2024

பதினாறு மகாஜனப்பதங்கள் - சான்றுகள்

மகாஜனப்பதங்கள்
ஜனபதம் என்பது ஜனா என்ற சொல்லில் இருந்து வந்தது. இதில் "ஜனா என்றால் இனக்குழு" என்றும் "ஜனபதம் என்றால் இனக்குழு தன் பாதம் பதித்த இடம்" என்றும் பொருள். அதாவது பின் வேதகாலத்தில் ஒவ்வொரு இனக்குழுவினரும் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தனர். அங்கு வம்சாவளி அடிப்படையிலான இனக்குழு அரசை தோற்றுவித்தனர். அவையே ஜனபதங்கள் என்று அழைக்கப்பட்டன. ஜனபதங்கள் வளங்களுக்காகவும் அரசியல் மேலாதிக்கத்திற்காகவும் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டன. அதில் சில ஜனபதங்கள் வலிமையாக இருந்ததால் அருகிலிருந்த மற்ற ஜனபதங்களைக் கைப்பற்றிக் கொண்டான. அதன் விளைவாக ஆட்சியாளரின் அதிகாரம் பெருகியது; அவரது எல்லையும் விரிவடைந்தது. இறுதியில் ஜனபதங்கள் மறைந்து "மகாஜனப்பதங்கள்" என்ற பெரிய அரசுகள் மலரத் தொடங்கின. 

பதினாறு மகாஜனப்பதங்கள் : 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வட இந்தியாவில் பதினாறு மகாஜனப்பதங்கள் இருந்தன. அவை மேற்கே காபூல் முதல் கிழக்கே வங்காளம் வரையிலும் வடக்கே இமயமலை முதல் தெற்கே கோதாவரி ஆறு வரையிலும் பரவியிருந்தன. அவற்றில் பல முடியரசுகளும் சில குடியரசுகளும் இருந்தன. முடியரசுகளைப் பற்றி புராணங்களும் குடியரசுகளைப் பற்றி சமண, பௌத்த இலக்கியங்களும் பெரிதும் விவரிக்கின்றன. 

அங்குத்தார நிகாயம் என்ற பௌத்த நூல், புத்தரது காலத்தில் இருந்த பதினாறு மகாஜனப்பதங்களின் பெயர்களைத் தருகிறது. அங்குத்தார நிகாயம், சுத்த பீடகத்தில் உள்ள ஐந்து நிகாயங்களில் நான்காவதாக வருகிறது. இதில் "சொலச மகாஜனபதாஸ்" (பதினாறு பெரிய அரசுகள்) இருந்ததாகக் கூறுப்பட்டுள்ளது. அவையாவன : 

1. அங்கம், 2. மகதம், 3. காசி, 4. கோசலம், 5. வத்சம், 6. அவந்தி, 7. குரு, 8. பாஞ்சாலம், 9. வஜ்ஜி, 10. மல்லம், 11. சேதி, 12. சூரசேனம், 13. அஸ்மகம், 14. மத்ஸயம், 15. காந்தாரம், 16. காம்போஜம். 

மகாவஸ்து என்ற பௌத்த நூலும் பதினாறு மகாஜனப்பதங்கள் இருந்ததாகக் குறிப்பிடுகிறது. ஆனால் வடமேற்கில் இருந்த காந்தாரம், காம்போஜம் ஆகிய இரண்டு அரசுகள் அதில் காணவில்லை. அதற்கு பதிலாக சிபி, தஷர்னா என்ற இரண்டு புதிய அரசுகள் சேர்க்கப்பட்டு உள்ளன. பகவதி சூத்திரம் என்ற சமண நூலும் பதினாறு மகாஜனப்பதங்கள் இருந்ததாகக் கூறுகிறது. ஆனால் அது பௌத்த இலக்கியங்கள் கூறும் அரசுகளின் பெயருடன் ஒப்பிடும்போது பெரிய அளவில் வேறுபடுகின்றன. அதில் வங்கம் மற்றும் மலேயா ஆகிய இரண்டு அரசுகள் இடம்பெற்று உள்ளன. இந்து மத நூலான புராணங்களும் சமஸ்கிருத இலக்கண நூலாசிரியரான பாணிணியின் படைப்புகளும் வட இந்தியாவில் இருந்த மகாஜனப்பதங்கள் பற்றி கூறுகின்றன. 

Prepared By
A. ARIVAZHAGAN, M.A., M.Phil., M.Ed. 
PG Teacher, Ranipet District
Cell - 9944573722



1 comment:

  1. அருமை தோழர்...


    புதிய தகவல்கள் பலவற்றை மிக எளிமையாக பதிவு செய்துள்ளீர்கள்...

    நன்றி தோழர்

    ReplyDelete