1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி.
அறிமுகம்.
✍️ இந்தியா இயற்கை வளம் மிகுந்த ஒரு நாடாக இருந்தது. மூலப் பொருட்கள் உற்பத்தியிலும் கைவினை தயாரிப்புகளிலும் முன்னணியில் இருந்தது. இந்திய பொருட்களுக்கு உலகம் முழுவதும் தேவை அதிகமாக இருந்தது. அதனால் உலகின் மிகச் சிறந்த ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா விளங்கியது. ஆனால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பனியின் ஆட்சி நிறுவப்பட்ட பிறகு இந்தியப் பொருளாதாரத்தின் நிலைமை தலைகீழாக மாறியது.
✍️ இந்தியாவின் செல்வ வளங்களை சுரண்ட வேண்டுமாயின் இந்தியா முழுவதையும் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியின் கீழ் கொண்டுவர வேண்டும் என்பதில் ஆங்கிலேயர்கள் உறுதியாக இருந்தனர். அதற்கான முயற்சியில் இறங்கிய ஆங்கிலேயர்கள் அதில் வெற்றியும் பெற்றனர். அரசியல் ரீதியாக இந்தியா ஒருமுகப்படுத்தப்பட்டது. ஆனால் பின்னாளில் அதுவே அவர்களுக்கு தலைவலியாக மாறியது.
✍️ ஆங்கிலேயர்களின் வருகையின் போது இந்தியாவில் ஒரு சில பேரரசுகளும் பல சிற்றரசுகளும் இருந்தன. உதாரணமாக மொகலாயப் பேரரசு, மாராத்தியப் பேரரசு, விஜயநகரப் பேரரசு, தக்காண சுல்தானியம் போன்ற பேரரசுகளும், ஹைதராபாத் நிஜாம், கர்நாடக நவாப், வங்காள நவாப், அயோத்தி பேகம், பஞ்சாப் அரசு, மைசூர் அரசு, திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற பல சிற்றரசுகளும் ஆட்சி செய்து வந்தன. ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய போதுகூட 565 சிற்றரசுகள் இருந்துள்ளன என்றால் அவர்கள் வருகையின் போது எத்தனை நாடுகளாக இந்தியா பிரிந்து கிடந்திருக்கும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
✍️ இந்தியா பல நாடுகளாக பிரிந்து கிடந்ததோடு மட்டுமல்லாமல் அவைகள் தங்களுக்குள்ளாகவே ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தமது நாட்டை உயர்வாகவும் அண்டை நாடுகளை எதிரியாகவும் கருதிய மக்களும் ஒருவித குறுகிய நாட்டு பற்றுடன் வாழ்ந்து வந்தனர். வியாபார நோக்கத்திற்காக வருகை புரிந்த ஆங்கிலேயர்கள் இந்திய அரசர்களிடம் காணப்பட்ட ஒற்றுமை இன்மையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசியலில் தலையிட ஆரம்பித்தார்கள்.
✍️ தொடக்கத்தில் சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களில் தங்களது வணிக ஸ்தலங்களை நிறுவிய ஆங்கிலேயர்கள் 1757 ஆம் ஆண்டு பிளாசிப் போர், 1764 ஆம் ஆண்டு பக்சார் போர் ஆகிய இரண்டு போர்களிலும் வெற்றி பெற்று இந்திய அரசர்களுக்கு மிகப்பெரும் சவாலாக உருமாறினார்கள். அதன்பிறகு படிப்படியாக பல இந்திய அரசர்களை போரில் தோற்கடித்து ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை தோற்றுவித்தார்கள். வியாபார செய்வதற்காக இந்தியாவிற்கு வருகை தந்த ஒரு கம்பெனி இந்தியாவை ஆளும் சக்தியாக மாறியது.
✍️ இந்தியா அரசியல் ரீதியாக ஒருமுகப்படுத்தப்பட்டு நாட்டின் பெரும்பாலான பகுதிகள் ஒரே குடையின் கீழ் கொண்டுவரப்பட்ட காரணத்தினால் மக்களிடத்தில் ஒற்றுமை வளர்ந்தது. இந்தியர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்வதை கைவிட்டு ஆங்கிலேயர்களை தங்கள் பொது எதிரியாக கருதி அணிசேர ஆரம்பித்தனர். நாம் அனைவரும் இந்தியர் என்ற தேசிய உணர்வு மக்களிடத்தில் தோன்றி வளர ஆரம்பித்தது. பல மொழி பேசிய மக்களை ஒருங்கிணைப்பதில் ஆங்கிலக் கல்வியும், நாட்டின் பல பகுதிகளையும் ஒருங்கிணைப்பதில் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு வசதியும் முக்கிய பங்கு வகித்தது.
✍️ வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காக காந்தியடிகள் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்தார். அங்கு ஆங்கிலேயே காலனிய ஆதிக்க அரசு பின்பற்றிய இனவாதக் கொள்கையையும் ஒப்பந்தக்கூலிகளாக சென்றிருந்த இந்தியர்களுக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட அடக்குமுறை சட்டங்களையும் எதிர்த்து சத்தியாகிரக போராட்டம் நடத்தினார். தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த இந்தியர்களுக்கு பல உரிமைகளைப் பெற்றுத் தந்தார்.
✍️ ஒரு சமயம் தென் ஆப்பிரிக்கா சென்றிருந்த கோபால கிருஷ்ண கோகலே இந்தியாவில் நடைபெறும் ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவதற்கு விரைவில் நாடு திரும்புமாறு கோரிக்கை வைத்தார். கோகுலேவை தனது அரசியல் குருவாக கருதிய காந்தியடிகள் அவரது கோரிக்கையை ஏற்று 1915 ஆம் ஆண்டு இந்தியா திரும்பினார். சமூக சீர்திருத்த இயக்கங்களைத் துவங்கி போராடுவது, குடிமை உரிமைகள் வேண்டி கோரிக்கை மனுக்களை அளிப்பது போன்ற பின்னணியில் தொடங்கிய இந்திய தேசிய இயக்கம் காந்தியடிகளின் வருகைக்கு பின்பு மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியது.
✍️ காந்தியடிகளின் வருகைக்கு முன்னர் தாதாபாய் நௌரோஜி, கோபால கிருஷ்ண கோகலே, பிபின் சந்திர பால், லாலா லஜபதி ராய், பால கங்காதர திலகர் போன்ற தொடக்க கால தேசியவாதத் தலைவர்கள் இந்தியாவில் நடைபெற்று வந்த காலனியச் சுரண்டல் குறித்தும், மக்களின் தேசிய அடையாளம் பற்றியும் இந்தியர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். இவர்கள் மேற்கொண்ட முன் முயற்சிகளே இந்தியாவில் தேசிய தோன்றி வளர அடித்தளமாக அமைந்தன.
நன்றி 🙏🙏🙏
A. அறிவழகன் M.A., M.Phil, M.Ed.,
வரலாறு முதுகலை ஆசிரியர்
அனைவரும் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவும் அருமையாகவும் உள்ளது.
ReplyDeleteRomba nalla iruku sir super valuthukal sir
ReplyDeleteVery nice sir. Great work sir.
ReplyDeleteதெளிவான கருத்துக்கள். எளிதில் புரிந்துகொள்ளும் படி உள்ளது. சிறப்பு.
ReplyDeleteசிறப்பான பணி. வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான தொகுப்பு மாணவர்களுக்காக
ReplyDelete