1. இந்தியாவில் தேசியத்தின் எழுச்சி
தேசியம் என்பதன் பொருள்
தேசியம் என்பது ஒரு நாட்டிற்கு விசுவாசமாகவும் பக்தியுடன் இருத்தல். தனது நாட்டை ஏனைய நாடுகளை விட உயர்வான இடத்தில் வைத்துப் போற்றுதல். தனது நாட்டின் பண்பாடு மற்றும் விருப்பங்களின் வளர்ச்சியில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
தேசியம் என்பதன் பொருளை மூன்று வரிகளில் சொல்லிவிடலாம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள வார்த்தைகளான விசுவாசமாக இருந்தல், பக்தியோடு இருத்தல், உயர்வான இடத்தில் வைத்தல், பண்பாட்டு வளர்ச்சி மற்றும் விருப்பங்களின் வளர்ச்சி ஆகியவற்றில் பொதிந்துள்ள அர்த்தங்கள் மிக மிக ஆழமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
✍ விசுவாசமாக இருத்தல்.
ஒருவன் எப்படி தன்னுடைய நாட்டிற்கு விசுவாசமாக இருக்க முடியும். தனது நாட்டிற்கும் அரசாங்கத்திற்கும் கட்டுப்பாட்டு இருப்பது. தனது நாட்டை உயிரினும் மேலாக நினைப்பது. போர் என்று வரும் போது எதிரி நாட்டுடன் போரிடுவதற்கு தயாராக இருப்பது. தாய்நாட்டுக்காக தனது இன்னுயிரையும் தியாகம் செய்யத் துணிந்து நிற்பது. எதிரி நாட்டுடன் கூட்டு சேர்ந்து தாய்நாட்டுக்கு துரோகம் இழைக்காமல் இருப்பது. தனது நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உண்மையாக இருப்பது. இவை அனைத்தையும் விசுவாசமாக இருத்தல் எனப் பொருள் கொள்ளலாம்.
✍️ பக்தியோடு இருத்தல்.
ஒவ்வொரு நாடும் தனக்கென தனித்துவமான தேசிய அடையாளங்களைக் கொண்டுள்ளது. அவற்றை போற்றுவதே தேசப் பக்தியாக கருதப்படுகிறது. உதாரணமாக தேசியக்கொடி, தேசியச் சின்னம், தேசிய ரூபாய், தேசிய விலங்கு, தேசியப் பறவை, தேசிய மரம், தேசிய மலர், தேசிய பழம், தேசிய விளையாட்டு ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பது. நாட்டுக்காகத் தனது இன்னுயிரையும் வாழ்க்கையையும் உடைமைகளையும் தியாகம் செய்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்துவது. தேசிய விழாக்களில் தவறாமல் கலந்து கொண்டு தனது தேசப்பற்றை வெளிப்படுத்துவது. இவை அனைத்தையும் பக்தியோடு இருத்தல் எனப் பொருள் கொள்ளலாம்.
✍️ உயர்வான இடத்தில் வைத்தல்.
உலக அரங்கில் தன்னுடைய நாடே உயர்ந்த நாடு, தலை சிறந்த நாடு, மிகவும் புகழ்பெற்ற நாடு, பெருமை வாய்ந்த நாடு எனப் பெருமிதம் கொள்வது. தனது நாட்டிற்கு ஈடு இணையாக உலகில் எந்த நாடும் இல்லை எனப் போற்றுவது. எதிரி நாடுகளுடன் நடைபெறும் போரின் போது மட்டுமல்ல விளையாட்டுப் போட்டி உட்பட அனைத்து விதமான போட்டிகளிலும் தன்னுடைய நாடே வெற்றி கொள்ளும் என உற்சாகம் கொள்வது. எந்த ஒரு நாடும் தனது நாட்டை வீழ்த்த முடியாது என ஆவேசம் கொள்வது. தனது நாட்டின் மீது அபரிமிதமான நம்பிக்கை வைப்பது. இவை அனைத்தையும் உயர்வான இடத்தில் வைத்தல் எனப் பொருள் கொள்ளலாம்.
✍️ பண்பாட்டு வளர்ச்சி.
தனது நாட்டின் நாகரிகம், கலாச்சாரம், மொழி, மரபுவழி கலைகள், கட்டடக்கலை, இசை, நடனம், நாடகம், இலக்கியம், விளையாட்டுக்கள், பாரம்பரியச் சின்னங்கள், விழாக்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் கவனம் செலுத்துவதே பண்பாட்டு வளர்ச்சி எனப் பொருள் கொள்ளலாம்.
✍️ விருப்பங்களின் வளர்ச்சி.
உலக அளவில் தனது நாடு அரசியல் வல்லமை பெற்ற நாடாக வளர்ச்சியடைய வேண்டும், ஏனைய நாடுகளுக்கு போட்டியாக பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும், சமூக மற்றும் பண்பாட்டு ரீதியில் வளர்ச்சி அடைய வேண்டும் என விருப்பம் கொள்வதே விருப்பங்களின் வளர்ச்சி என பொருள் கொள்ளலாம்.
தேசியம் என்ற கருத்தாக்கம் தோன்றி வளர்ச்சி பெற்ற நாடுகள்.
தேசியம் என்ற கருத்தாக்கம் எந்தெந்த நாடுகளில் தோன்றி வளர்ச்சி அடைந்தது? அதன் விளைவாக உலகில் எத்தகைய மாற்றங்கள் ஏற்பட்டது? தேசியம் என்ற கருத்தின் வலிமை யாது? என்பது குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
✍️ அமெரிக்க விடுதலைப் போர் (1775 - 1783)
வெர்ஜினியா முதல் ஜார்ஜ் வரை அமைந்த 13 அமெரிக்க குடியேற்றங்களை ஆங்கிலேயர்கள் நிறுவினார்கள். அமெரிக்க மக்களிடம் தேசியம் தோன்றி 13 குடியேற்றங்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாடு என்ற தேசிய உணர்வோடு பிரிட்டிஷ் காலனிய ஆதிக்க அரசை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்றது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்ற சுதந்திர நாடு உதயமானது.
✍️ பிரஞ்சுப் புரட்சி - 1789
பிரான்சை ஆட்சி செய்த பூர்போன் வம்சத்தைச் சேர்ந்த 16 ஆம் லூயியின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து பிரான்ஸ் நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 1789 ஆம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்டனர். முடியாட்சிக்கு எதிராக பிரான்சில் தோன்றிய தேசிய உணர்வு ஐரோப்பாவிலுள்ள பல நாடுகளுக்கும் வேகமாகப் பரவியது.
✍️ இத்தாலிய இணைப்பு - 1871
பிரான்சை ஆட்சி செய்த மாவீரன் நெப்போலியன் ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள பெரும்பாலான நாடுகளை கைப்பற்றி ஐரோப்பாவின் வரைபடத்தையே மாற்றி அமைத்தார். அவரது வீழ்ச்சிக்குப் பிறகு இத்தாலி பல சிறு சிறு பகுதிகளாகத் துண்டாடப்பட்டது. இத்தாலியில் தோன்றிய தேசியத்தின் எழுச்சியால் 1871 இல் இத்தாலிய இணைப்பு சாத்தியமானது.
✍️ ஜெர்மானிய இணைப்பு - 1871
பிரான்சை ஆட்சி செய்த மாவீரன் நெப்போலியன் ஜெர்மனியையும் கைப்பற்றினார். அவரது வீழ்ச்சிக்குப் பிறகு ஜெர்மனியும் பல சிறு சிறு பகுதிகளாகத் துண்டாடப்பட்டது. ஜெர்மனியில் தோன்றிய தேசியத்தின் எழுச்சியால் 1871 இல் பிராங்கோ- பிரஷ்யப் போரின் முடிவில் ஜெர்மானிய இணைப்பு சாத்தியமானது. அதில் பிஸ்மார்க் முக்கிய பங்கு வகித்தார்.
✍️ சீனப் புரட்சி - 1911
சீனாவை ஆட்சி செய்த மஞ்சு வம்ச அரசர்கள் திறமையற்றவர்களாக இருந்தார்கள். அவர்களது வலிமையற்ற ஆட்சியின் காரணமாக சீனா பல ஐரோப்பிய நாடுகளுக்கு திறந்து விடப்பட்டது. அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிப்படைந்த சீன மக்களிடையே தேசியம் தோன்றி 1911 சீன புரட்சிக்கு வித்திட்டது. அதில் சன்யாட்சன் முக்கிய பங்கு வகித்தார்
✍️ ரஷ்யப் புரட்சி - 1917
ரஷ்யாவை ஆட்சி செய்த ரோமனோவ் வம்சத்தைச் சேர்ந்த அரசன் சார் இரண்டாம் நிக்கோலஸின் கொடுங்கோல் ஆட்சியை எதிர்த்து ரஷ்ய நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து 1917 ஆம் ஆண்டு புரட்சியில் ஈடுபட்டனர். முடியாட்சிக்கு எதிராக ரஷ்யாவில் தோன்றிய தேசிய உணர்வு சோவியத் ரஷ்யா என்ற கம்யூனிச நாடு உருவாக வழிவகுத்தது.
✍️ இந்தியப் பெருங்கலகம் - 1857
இந்தியாவில் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி பின்பற்றிய நாடுபிடிக்கும் கொள்கை, பேரரசு விரிவாக்கக் கொள்கை மற்றும் பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்க ஆட்சி ஆகியவற்றுக்கு எதிராக தோன்றிய எதிர்ப்புணர்வு 1857ஆம் ஆண்டு இந்திய பெருங் கலகத்திற்கு அழைத்துச் சென்றது. இந்த எதிர்ப்புணர்வு இந்தியாவில் தேசியம் தோன்றுவதற்கு துவக்கப் புள்ளியாக அமைந்தது.
நன்றி 🙏🙏🙏
A. அறிவழகன் M.A., M.Phil, M.Ed.,
வரலாறு முதுகலை ஆசிரியர்
No comments:
Post a Comment